காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகாரின் பாட்னாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் தந்தை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாட்னாவில் முன்னாள் முதல்வர் கிருஷ்ண சிங்கின் 139வது பிறந்த நாள் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மற்றும் பிரதமர் மோடி குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர், 'பிரதமர் மோடியை யாராலும் தோற்கடிக்க முடியாது' என்று கூறினார். உடனடியாக காங்கிரஸ் தொண்டர்கள் அவரைத் தாக்கி அங்கிருந்து வெளியேற்றினர்.
இதைக் கண்டு ஆத்திரமடைந்த மல்லிகார்ஜுன கார்கே, 'மோடியின் தந்தை வந்தாலும் அவரைத் தோற்கடிக்க முடியாது' என்று கருத்து தெரிவித்தார். இந்த பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பிரதமர் மோடியின் தந்தையைப் பற்றி அவதூறாக பேசியதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீது பாட்னா கோட்வாலி காவல் நிலையத்தில் பாஜக மாநில காரிய கமிட்டி உறுப்பினர் கிருஷ்ணா சிங் கல்லு புகார் அளித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னதாக, பிரதமர் மோடியின் தாய் குறித்து எதிர்க்கட்சி நிர்வாகி ஒருவர் அவதூறாக பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் இதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த முறை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சு பாஜகவினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவினர் இந்த பேச்சுக்கு கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இது போன்ற கருத்துக்கள் அரசியல் நாகரிகமற்றவை என்றும், இது கண்டிக்கத்தக்கது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
