முன்னணி திமுக அரசியல் தலைவரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி, தற்போது தனது பெயரில் ஒரு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளார். இதுவரை ‘கனிமொழி கருணாநிதி’ என்று அறியப்பட்டு வந்த அவர், இனி தனது தாயார் ராஜாத்தி அம்மாளின் பெயரை தனது பெயரின் நடுவில் இணைத்து ‘கனிமொழி ராஜாத்தி கருணாநிதி’ என்ற பெயரில் அழைக்கப்படுவார். இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 9ஆம் தேதி வெளியான சட்டப்பூர்வ அறிவிப்பின்படி, 1968ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி சென்னையில் பிறந்த கனிமொழி கருணாநிதி, இனி ‘கனிமொழி ராஜாத்தி கருணாநிதி’ என்றே அறியப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் நாடாளுமன்ற குறிப்புகளிலும் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியலுக்குள் வருவதற்கு முன்னர், கனிமொழி ஒரு இலக்கியவாதியாக ‘கனிமொழி’ என்ற பெயரிலேயே பரவலாக அறியப்பட்டார். அரசியலில் நுழைந்த பிறகு, அவரது தந்தையும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் பெயர் அவரது பெயருடன் சேர்க்கப்பட்டு ‘கனிமொழி கருணாநிதி’ என அழைக்கப்பட்டார். தற்போது, நாடாளுமன்றத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் அவர், தனது தாயாரின் பெயரைத் தனது பெயருடன் இணைத்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பரவலான வரவேற்பும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இது அவரது குடும்பப் பிணைப்பையும், தாயார் மீதான மரியாதையையும் வெளிப்படுத்துவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பெயர் மாற்றம், அரசியல் வட்டாரத்திலும் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
