அமெரிக்க ராணுவம், நைஜீரிய ஆயுதப் படைகளுடன் இணைந்து, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இரண்டாம் நிலைத் தளபதி அபு-பிலால் அல்-மினுகியை ஆப்பிரிக்காவில் கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது ஒரு துல்லியமாக திட்டமிடப்பட்ட, சிக்கலான இராணுவ நடவடிக்கை என ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
"என் நேரடி உத்தரவின் பேரில், அமெரிக்கப் படைகளும் நைஜீரியப் படைகளும் இணைந்து, உலகின் மிகத் தீவிரமான பயங்கரவாதியை போர்க்களத்திலிருந்து அகற்றியுள்ளன. அபு-பிலால் அல்-மினுகி ஆப்பிரிக்காவில் பதுங்கிக்கொள்ள முடியும் என நினைத்தார். ஆனால், அவர் என்ன செய்கிறார் என்பது குறித்த தகவல்களை உளவாளிகள் தொடர்ந்து அளித்து வந்தனர். அவர் இனி ஆப்பிரிக்க மக்களை அச்சுறுத்தவோ, அமெரிக்கர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தவோ முடியாது," என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உலகளாவிய செயல்பாடுகள் பெருமளவில் முடங்கியுள்ளதாகவும், இந்த வெற்றியில் இணைந்து செயல்பட்ட நைஜீரிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ட்ரம்ப் தனது பதிவில் கூறியுள்ளார். 'கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அபு-பிலால் அல்-மினுகியை ஜூன் 2023-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் 'உலகளாவிய பயங்கரவாதி' என அறிவித்திருந்தது. இவர் அபுபக்கர் மைனோக், அபோர் மைனோக் போன்ற பல புனைப்பெயர்களிலும் செயல்பட்டு வந்துள்ளார்.