மும்பையில் பிரபல கிரிக்கெட் அணியான பஞ்சாப் கிங்ஸ்-ன் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, சமையல்காரர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஷஷாங்க் சிங், அவரது தந்தை, சகோதரி மற்றும் ஓட்டுநர் ஆகியோர் தன்னை கொடூரமாகத் தாக்கியதாக சமையல்காரர் விபேந்திர சிங் தோமர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஷஷாங்க் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமையல்காரர் விபேந்திர சிங் தோமர் அளித்த புகாரில், நில்பாத் பகுதியில் உள்ள ஷைலேஷ் சிங்கின் பங்களாவில் மாதம் 15,000 ரூபாய் சம்பளம், இலவச தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்காலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். வேலைப்பளு காரணமாக பணியை விட்டு விலக விரும்புவதாக தோமர் தெரிவித்தபோது, ஷஷாங்கின் தந்தை ஷைலேஷ் சிங் அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. 'நீ எதற்காக இங்கு வந்தாய்? என்னைக் கொலை செய்ய வந்தாயா? அல்லது திருட வந்தாயா? உன்னை விசாரிக்கும்படி செய்வேன். நீ குறைந்தது ஒரு மாதமாவது இங்கு வேலை செய்ய வேண்டும். உன்னை போன்ற பலரை நான் சுட்டுள்ளேன்' என்று ஷைலேஷ் சிங் மிரட்டியதாகவும், அவரது செல்போனையும் பிடுங்கி வைத்ததாகவும் தோமர் புகாரில் கூறியுள்ளார்.
தனது செல்போனைத் திரும்பப் பெறுவதற்காக தோமர் மேலும் இரண்டு நாட்கள் தொடர்ந்து வேலை செய்துள்ளார். ஆனால், போன் கிடைக்காததால் ஒரு அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு போனைத் திரும்பக் கேட்டுள்ளார். அப்போது, குடும்பத்தின் ஓட்டுநர் கதவை உடைக்க முயன்றுள்ளார். பின்னர் அங்கு வந்த கிரிக்கெட் வீரர் ஷஷாங்க் கதவைத் திறக்குமாறு கேட்டுள்ளார். கதவைத் திறந்தவுடன், ஓட்டுநரும் ஷஷாங்க் சிங்கும் சேர்ந்து தன்னை நாய் போல அடித்ததாகவும், ஷஷாங்கின் தந்தை மற்றும் சகோதரியும் அவர்களுடன் இணைந்து, தான் இறந்துவிடுவேன் என்று நினைக்கும் வரை தொடர்ந்து அடித்ததாகவும் விபேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய மருத்துவப் பரிசோதனையில் தோமரின் முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டதற்கான தழும்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மூன்று நாட்கள் அங்கு சாப்பிட்ட உணவிற்கான தொகையைத் திருப்பித் தருமாறு அவர்கள் கேட்டதாகவும், இதனால் தனது மைத்துனர் அனுப்பிய 1,000 ரூபாயை அவர்களிடம் கொடுத்ததாகவும் தோமர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.