ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 9-வது இடத்தைப் பிடித்து வெளியேறியதைத் தொடர்ந்து, அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த இலங்கை முன்னாள் வீரர் மகேலா ஜெயவர்த்தனே அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இந்த நிலையில், 2027 ஐபிஎல் சீசனுக்கான புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்வதற்காக, ஐந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் நேர்காணல் நடத்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹஸ்ஸி மற்றும் ஆரோன் ஃபின்ச், தென்னாப்பிரிக்காவின் ஏட்ரியன் பிரெல் மற்றும் மார்க் பவுச்சர், இங்கிலாந்தின் இயான் மோர்கன் ஆகிய ஐந்து முன்னாள் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்து விளங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, கடந்த ஒன்பது ஆண்டுகளாக மும்பை அணியின் முக்கிய எதிரணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் கோட்சாக செயல்பட்ட மைக்கேல் ஹஸ்ஸி, இந்தப் புதிய பொறுப்பிற்கு ஒரு வலுவான போட்டியாளராகக் கருதப்படுகிறார். சமீபத்தில் ஜாகீர் கான் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு டி20 உலகக்கோப்பையை வென்று தந்த முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச், ஒன்பது ஐபிஎல் அணிகளுக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர். இருப்பினும், அவருக்கு முறையான பயிற்சியாளர் அனுபவம் குறைவாகவே உள்ளது.
இங்கிலாந்தின் முன்னாள் கேப்டனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தியவருமான இயான் மோர்கனும் இந்தப் பட்டியலில் உள்ளார். இவருக்கும் பயிற்சியாளர் அனுபவம் குறைவு என்றாலும், நவீன கிரிக்கெட் அணுகுமுறையைக் கொண்டுவரக் கூடியவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவின் ஏட்ரியன் பிரெல், எஸ்ஏ20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்காக மூன்று பட்டங்களை வென்று கொடுத்து, உலகம் முழுவதும் பல்வேறு அணிகளுக்குப் பயிற்சி அளித்த அனுபவம் வாய்ந்தவர் ஆவார். இவரது பயிற்சியாளர் திறமை பரவலாக அறியப்படுகிறது.
கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றிய மார்க் பவுச்சரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 2024-இல் மும்பை அணி 10-வது இடத்தைப் பிடித்ததால் அவர் நீக்கப்பட்டு, ஜெயவர்த்தனே மீண்டும் நியமிக்கப்பட்டார். தற்போது ஜெயவர்த்தனே விலகியுள்ள நிலையில், பவுச்சருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
2017 முதல் 2022 வரையிலான தனது முதல் சுற்றில் மும்பை அணிக்கு மூன்று ஐபிஎல் பட்டங்களை வென்று தந்த மகேலா ஜெயவர்த்தனேவின் இடத்தை நிரப்புவது, புதிய கோட்சாக பெரும் சவாலாக இருக்கும். இந்த ஐந்து வீரர்களில் யார் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளராக வருவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
