இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி அடைந்த படுதோல்வியைத் தொடர்ந்து, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தலைமைப் பயிற்சியாளர் சர்பராஸ் அகமது, பந்துவீச்சு பயிற்சியாளர் உமர் குல் உள்ளிட்ட இரு பயிற்சியாளர்கள் மற்றும் 7 வீரர்களை உடனடியாக பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப பிசிபி (PCB) உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கேப்டன் பாபர் அசாம் தனது அணி வீரர்களுக்காகவும், பயிற்சியாளர்களுக்காகவும் குரல் கொடுக்காததை முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்விகளைச் சந்தித்தது. இதன் விளைவாக, முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, இமாம்-உல்-ஹக் உள்ளிட்ட 7 வீரர்களையும், தலைமைப் பயிற்சியாளர் சர்பராஸ் அகமது மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் உமர் குல் ஆகியோரையும் உடனடியாக பாகிஸ்தானுக்கு திரும்புமாறு பிசிபி உத்தரவிட்டது.
இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய ரஷித் லத்தீப், 'பாபர் அசாம் உடனடியாக தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். பாதி அணி திருப்பி அனுப்பப்படும்போது, நீங்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்? நீங்கள் ஒரு டம்மி கேப்டனாக மாறிவிட்டீர்கள். தலைவன் என்பதற்கும், கேப்டன் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது' என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், '7 வீரர்களை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்த உங்களது பயிற்சியாளரையும், உமர் குல்லையும் பிசிபி நீக்கியுள்ளது. ஆனால், நீங்கள் தட்டிக் கேட்காமல் அமைதியாக இருக்கிறீர்கள். பிசிபி-க்கு எப்போதும் ஒரு டம்மி கேப்டன் தான் தேவைப்படுகிறது என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது' என்று கொந்தளித்தார்.
இந்த டெஸ்ட் தொடரில், காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத பாபர் அசாம், இரண்டாவது டெஸ்டில் களமிறங்கி 8 மற்றும் 6 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். பாகிஸ்தான் அணி இரண்டாவது போட்டியில் தோல்வியைச் சந்தித்ததற்கும் அவரும் ஒரு முக்கிய காரணம் ஆவார்.
தற்போது, மீதமுள்ள பாகிஸ்தான் வீரர்களைக் கொண்டு மூன்றாவது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ள இருக்கிறார் அந்த அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பயிற்சியாளர் மைக் ஹெசன். இந்த விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பல பயிற்சியாளர்கள், தேர்வுக் குழுவினர், கேப்டன்களை மாற்றிவிட்ட போதிலும், பாகிஸ்தான் அணிக்கு வெற்றிகள் மட்டும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
