தேசபக்தி முடிவு: பாகிஸ்தான் அமைச்சரிடம் கோப்பை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையை வென்றது

துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மறுத்ததற்கான பின்னணி குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா விரிவான விளக்கம் அளித்துள்ளார். இந்திய ஆண்கள் அணியின் முந்தைய நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே மகளிர் அணியும் இந்த உறுதியான முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 8-வது முறையாக ஆசிய கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது. ஆனால், ஆட்டம் முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய வீராங்கனைகள் மறுத்து மேடைக்கு வரவில்லை. இதனால், இலங்கை அணிக்கு 2-வது இடத்திற்கான காசோலையை மட்டும் வழங்கிவிட்டு நக்வி மைதானத்தை விட்டு அவசரமாக வெளியேறினார்.

இது குறித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, கடந்த 2025 ஏப்ரல் மாதம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நமது நாட்டின் ஒட்டுமொத்த சூழலும் முற்றிலும் மாறியது. அண்டை நாட்டுடன் (பாகிஸ்தானுடன்) எந்தவித உறவோ அல்லது கிரிக்கெட் தொடர்போ வைத்திருக்கக் கூடாது என இந்திய மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும் அழுத்தமும் ஏற்பட்டது. ஆனாலும், பல நாடுகள் பங்கேற்கும் தொடர்களில் அனைத்து நாடுகளுடனும் விளையாட வேண்டும் என்பது நமது இந்திய அரசின் கொள்கையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசு விளையாட அனுமதித்தாலும், அவர்கள் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் நாம் ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை. நமது நாட்டின் எல்லைகளில் ராணுவ மோதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலில், நமது நாட்டின் நலன்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படும் ஒரு முக்கிய தலைவரிடம் இருந்து நமது வீராங்கனைகளால் எப்படி சாம்பியன் கோப்பையைப் பெற முடியும்? கடந்த ஆண்டு ஆண்கள் அணி எடுத்த அதே தேசபக்தி முடிவிற்கு நமது மகளிர் அணியும் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது என்று ஆவேசமாகக் கூறினார்.

மேலும், கோப்பையை வாங்காததால் நமது வீராங்கனைகளின் அசாத்திய திறமையோ உழைப்போ குறைந்துவிடாது. இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி எதிரணிகளை பந்தாடி ஒருதலைப்பட்சமாக வென்றுள்ளது. இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் அசுர வளர்ச்சி அடைந்து வருவதற்கு இதுவே மிகப்பெரிய சான்றாகும். எங்களது அடுத்த முழு கவனமும் 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை நோக்கியே உள்ளது என்றும் சைகியா குறிப்பிட்டார்.

இந்தப் போட்டியின் போது துபாய் மைதானத்தின் ராயல் பாக்ஸில் மோசின் நக்வியுடன் அமர்ந்து பேசியது குறித்து எழுந்த சர்ச்சைக்குப் பதிலளித்த சைகியா, டாஸ் போடப்பட்டது முதல் ஆட்டம் முடியும் வரை நான் ராயல் பாக்ஸில் தான் அமர்ந்திருந்தேன். துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் அமீரக துணைத் தலைவர் காலித் ஆகியோருடன் நக்வியும் வந்து அமர்ந்தார். மைதானத்தில் இருக்கும் போது ஒருவரை சந்தித்து பேசுவது இயல்பான மரபு மட்டுமே. நேற்றைய விவகாரத்தில் வேறு அதிகாரியைக் கொண்டு பரிசளிக்க நாங்களும் முயற்சித்தோம்; ஆனால் அது பலனளிக்கவில்லை. இதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. யார் கையில் கோப்பையைத் தருகிறார்கள் என்பது எங்கள் நோக்கமல்ல, இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம். அதை நாங்கள் சாதித்துவிட்டோம் என்று விளக்கமளித்தார்.

மைதான மேடைக்குச் செல்லாமல் இந்திய அணியின் ஓய்வறையிலேயே வீராங்கனை நந்தினி சர்மாவுக்கு சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை வழங்கியதாகக் குறிப்பிட்ட அவர், அந்த நேரத்தில் அடுத்ததாக வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் குறித்து மட்டுமே வீராங்கனைகளுடன் ஆலோசிக்கப்பட்டதாகவும், கோப்பை சர்ச்சை குறித்து எவ்வித விவாதமும் நடைபெறவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாக். அமைச்சரிடம் கோப்பை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி

பரிசளிப்பு விழாவில் இந்திய மகளிர் அணி வீராங்கனைகள்

மகளிர் ஆசிய கோப்பை டி-20 இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. இருப்பினும், பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) தலைவருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க இந்திய வீராங்கனைகள் மறுத்ததால் மைதானத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், இந்திய அணி நிர்ணயித்த 184 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி, வெறும் 111 ரன்களுக்குள் சுருண்டது. இதன் மூலம் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

வழக்கமாக போட்டி முடிந்ததும் நடைபெறும் பரிசளிப்பு விழா, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராகவும், அந்நாட்டு உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கும் மொஹ்சின் நக்வி, ஏ.சி.சி., தலைவராக இருப்பதால் அவரே சாம்பியன் கோப்பையை வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், 'மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை நாங்கள் பெற்றுக்கொள்ள மாட்டோம். மாறாக, ஏ.சி.சி., துணைத் தலைவர் காலித் அல் ஜரூனி அல்லது வேறு நிர்வாகிகள் வழங்கினால் பெற்றுக்கொள்கிறோம்' என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ., திட்டவட்டமாக தெரிவித்தது.

இதற்கு நக்வி பிடிவாதமாக மறுத்து, தானே கோப்பையை வழங்குவேன் என முரண்டு பிடித்ததாகக் கூறப்படுகிறது. இரு தரப்பினருக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படாததால், இந்திய அணி வீராங்கனைகள் களத்திற்கு வராமல் டிரெஸ்ஸிங் ரூமிலேயே தங்கியிருந்தனர்.

இறுதியில், இரண்டாம் இடம் பிடித்த இலங்கை அணிக்கு மொஹ்சின் நக்வி காசோலையை வழங்கியதும், பரிசளிப்பு விழா பாதியிலேயே அவசர அவசரமாக முடித்துக்கொள்ளப்பட்டது. இந்திய அணிக்கு அதிகாரப்பூர்வ கோப்பை வழங்கப்படாமல் அரங்கம் களையிழந்தது.

இதனையடுத்து, மைதானத்திலேயே பி.சி.சி.ஐ., செயலாளர் தேவஜித் சைகியா உள்ளிட்ட நிர்வாகிகள் இந்திய வீராங்கனைகளுக்கு பதக்கங்களை அணிவித்து தங்களது பாராட்டைத் தெரிவித்தனர். இந்த சம்பவம் மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version