துபாயில் நடைபெறவுள்ள 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டியின் பரிசளிப்பு விழாவில், இந்திய அணிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்விக்கும் இடையே மீண்டும் ஒரு புதிய சர்ச்சை வெடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இறுதிப்போட்டிக்கு மோஷின் நக்வி தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளதே இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆண்கள் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது, இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களைக் கூறி வந்த பாகிஸ்தான் அமைச்சரான மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்துவிட்டனர். இந்த மோதல் காரணமாக, இந்திய அணி கோப்பை இல்லாமலேயே மேடையில் வெற்றியை கொண்டாடியது. அந்த கோப்பை இன்றும் துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இதே போன்ற ஒரு சூழ்நிலை மகளிர் ஆசிய கோப்பையிலும் உருவாகியுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, குரூப் சுற்றில் ஹாங்காங், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி, இதுவரை தோல்வியே அடையாமல் கம்பீரமாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனால், இந்திய அணியே இத்தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஒருவேளை இந்திய அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றால், தலைமை விருந்தினராக பங்கேற்கும் மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்திய அணிக்கு எதிரான கருத்துக்களை மோஷின் நக்வி தொடர்ந்து கூறி வந்ததால், அவரிடமிருந்து கோப்பையைப் பெறுவதை இந்திய வீராங்கனைகள் தவிர்ப்பார்கள் என்று கூறப்படுகிறது. இது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. 2026 மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்றால், இந்த சர்ச்சை மீண்டும் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன.
முன்னதாக, ட்ரை சீரீஸ் பைனலில் தென்னாப்பிரிக்கா ஜிம்பாப்வேவை வீழ்த்தி கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.
