பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என 21 முன்னாள் சர்வதேச கிரிக்கெட் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷேபாஸ் ஷெரீப்புக்கு கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் கிரெக் சாப்பல் ஆகியோர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், அரசியல் காரணங்களுக்காக அல்லாமல், கிரிக்கெட் மைதானத்தில் தங்களுக்குள் ஏற்பட்ட நட்பு மற்றும் எல்லையைக் கடந்த பிணைப்பின் அடிப்படையில் இந்த வேண்டுகோளை முன்வைப்பதாக முன்னாள் கேப்டன்கள் குறிப்பிட்டுள்ளனர். இது ஒரு மனிதநேய அடிப்படையிலான கோரிக்கை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு 14 முன்னாள் கேப்டன்கள் இதுதொடர்பாக கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது மேலும் ஏழு முன்னாள் கேப்டன்கள் இணைந்து இம்ரான் கானின் தற்போதைய நிலை குறித்து தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இம்ரான் கானின் உடல்நிலை குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் பொய் பிரச்சாரம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஹ்சின் நக்வி கூறியிருந்தாலும், அவரது நிலை குறித்து இந்த கேப்டன்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இம்ரான் கான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவரது சொந்த மருத்துவர்கள் மற்றும் அவரது சகோதரி டாக்டர் உஸ்மா கான் அடங்கிய மருத்துவக் குழுவால் பரிசோதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் சில மணி நேரங்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அரசு நியமித்த குழுவால் மட்டுமே பரிசோதிக்கப்பட்டு மீண்டும் அதியாலா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டவாறு, இம்ரான் கானின் சொந்த மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு அவரது உடல்நலம் குறித்தும், குறிப்பாக அவரது வலது கண்ணில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் பார்வை குறைபாடு குறித்தும் முழுமையான மற்றும் சுதந்திரமான பரிசோதனையை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தால் மீண்டும் அனுமதிக்கப்பட்ட வாராந்திர குடும்ப சந்திப்புகள் எந்தவொரு நிர்வாகத் தாமதமோ அல்லது தடையோ இன்றி தொடர வழிவகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
73 வயதாகும் இம்ரான் கான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காவலில் உள்ளார். சட்ட மற்றும் அரசியல் விவாதங்கள் எப்படி இருந்தாலும், நீதிமன்றம் உத்தரவிட்ட மருத்துவ பரிசோதனைகளை முறையாக மேற்கொண்டு அதற்கான சிகிச்சைகளை உடனடியாக வழங்குவதே மனிதநேய செயல்முறையாகும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு மனிதநேய அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கடிதத்தில் இந்தியாவின் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் நிகாஞ்ச், திலீப் வெங்சர்க்கார், ஆஸ்திரேலியாவின் கிரெக் சாப்பல், இயன் சாப்பல், ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக், ஆடம் கில்கிறிஸ்ட், கிம் ஹியூஸ், இங்கிலாந்தின் மைக்கேல் ஆதர்டன், சர் அலாஸ்டர் குக், டேவிட் கோவர், நாசர் ஹுசைன், மைக்கேல் பிரியர்லி, சர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், மேற்கிந்திய தீவுகளின் சர் கிளைவ் லாயிட், இலங்கையின் அர்ஜுன ரணதுங்க, நியூசிலாந்தின் ஜான் ரைட், லீ ஜெர்மன் மற்றும் ஆஸ்திரேலிய பெண் கிரிக்கெட் அணியின் அலெக்ஸ் பிளாக்வெல், பெலிண்டா கிளார்க் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த 21 கேப்டன்களின் கூட்டு வேண்டுகோள், இம்ரான் கானின் உடல்நலம் குறித்த சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
