பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டனுமான வசீம் அக்ரம், சக வீரரும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இம்ரான் கானின் உடல்நலனில் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் வசீம் அக்ரம், 'நான் இம்ரான் கானுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக பேசவில்லை. அரசியல் ரீதியாக அவருக்கு தற்போது நடக்கும் நிகழ்வுகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை. நீதிமன்ற நடைமுறைகள் ஒருபுறம் இருந்தாலும், அவரது உடல்நலனைப் பொறுத்தவரை எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளக் கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளில் இம்ரான் கானின் நிலைமையை மேம்படுத்த சில இயக்கங்கள் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அக்ரம், பாகிஸ்தானில் அதுபோன்ற முயற்சிகள் நடக்கிறதா என்பது தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.
'ஒரு தனிமனிதனாக அவர் மீது நான் கொண்டுள்ள அக்கறையின் காரணமாகவே எனது மனதின் ஆழத்திலிருந்து பேசுகிறேன். அவர் தண்டனை பெற்றவரா இல்லையா, சிறையில் இருக்கிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல. நாம் அவரது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும். அங்கே என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியவில்லை. அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக அரசு கூறுகிறது. ஆனால் நான் கவலைப்படுகிறேன். அவரை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்' என வசீம் அக்ரம் உருக்கமாகக் கூறினார்.
சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பல்வேறு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், பாகிஸ்தான் வீரர்களும் தற்போது அரசுக்கு எதிராக குரல் எழுப்பி உள்ளனர்.
வசீம் அக்ரமின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு இம்ரான் கான் ஒரு வழிகாட்டியாக (மெண்டராக) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நெருங்கிய உறவின் காரணமாகவே, இம்ரானின் உடல்நிலை குறித்த கவலை வசீம் அக்ரமை அதிகமாக பாதித்துள்ளது.
