தமிழ்நாட்டின் வருவாய் ஈட்டும் திறனுக்கு ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் புள்ளிவிவரங்கள் ஒரு சிவப்பு எச்சரிக்கையை விடுப்பதாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடர்ந்தால், மாநில அரசு செலவுகளைக் குறைப்பது அல்லது மேலும் கடன் வாங்குவது போன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டிருந்த அவர், "தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது. இதே நிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா, மேலும் கடன் வாங்குவதா என்ற கடினமான நிலைக்கு தமிழ்நாடு அரசு விரைவில் தள்ளப்படலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி புள்ளிவிவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை என்றும், 2025 ஆகஸ்டில் ரூ.10,329 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல், 2026 ஆகஸ்டில் ரூ.10,189 கோடியாகக் குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது மைனஸ் 1% சரிவாகும்.
ஆனால், இதே காலகட்டத்தில் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வசூல் 9% அதிகரித்துள்ளது. மேலும், கர்நாடகா 13%, குஜராத் 15%, தெலங்கானா 16%, உத்தரப் பிரதேசம் 19%, மகாராஷ்டிரா 8% என மற்ற மாநிலங்கள் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஆனால், தமிழ்நாடு மட்டும் மைனஸ் 1% சரிவைச் சந்தித்துள்ளது.
சாதாரண மக்களுக்கு ஜிஎஸ்டி எண்கள் ஏன் முக்கியம் என்றால், தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38% எஸ்ஜிஎஸ்டி மூலமாக மட்டுமே கிடைக்கிறது. வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலையில், கடன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.
இந்த கணக்கு சரியாக வர வேண்டுமென்றால், அரசின் வருவாய் கட்டாயம் வளர வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல், இதற்கு நேர்மாறாக மைனஸ் 1% சரிவைக் காட்டியுள்ளது. இது ஒரு மாத புள்ளிவிவரத்தை வைத்து ஒரு ஆண்டுக்கான போக்கைத் தீர்மானிக்க முடியாது என்று சிலர் கூறலாம்.
உண்மைதான். ஆனால் இந்தியா 9% வளரும்போதும், நம்மோடு போட்டியிடும் முக்கிய மாநிலங்கள் அனைத்தும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும்போது, தமிழ்நாடு மட்டும் மைனஸ் 1%-ல் இருப்பது சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாத ஒன்று. இது நிச்சயம் ஒரு முக்கிய எச்சரிக்கை மணி.
இந்த நிலை தொடர்ந்தால், பற்றாக்குறையாகும் பணத்தை எங்கிருந்து கொண்டு வரப் போகிறார்கள்? மேலும் கடன் வாங்கப் போகிறார்களா? அல்லது வேறு வரிகளை உயர்த்தப் போகிறார்களா? சாலைகள், உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கப் போகிறார்களா? வருவாய் இல்லாமல் பட்ஜெட் வெறும் காகிதக் கணக்குதான் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த மைனஸ் 1% ஜிஎஸ்டி சரிவு ஒரு தொடர்கதையாக மாறுவதை தமிழ்நாடு தாங்க முடியாது என்றும், இது கட்டுப்படுத்த முடியாத சரிவாக மாறுவதற்கு முன்பாவது தற்போதைய அரசு விழித்துக்கொள்ளுமா என்றும், இந்த சரிவுக்கு என்ன காரணம் என்று அரசு தெளிவாக விளக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
