நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து, ரூபாய் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியை குறைத்து, அந்நிய செலாவணியை சேமிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிப்பதால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் விரைவில் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக அதிக அந்நிய செலாவணியை இந்தியா செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை குறைத்து, ரூபாய் மதிப்பின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
முன்னதாக, கடந்த 10 ஆம் தேதி தெலுங்கானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எரிபொருள் நுகர்வை குறைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார். கொரோனா காலத்தை போல வீட்டிலிருந்து வேலை செய்தல், ஆன்லைன் மீட்டிங்குகள், வீடியோ கான்பரன்சிங் போன்ற முறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டும் என்றும், பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், ஓராண்டுக்கு திருமணத்திற்காக தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறும், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் ஆடம்பர செலவுகளை குறைக்குமாறும் அவர் நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்த பின்னணியில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. உலகளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியா 2வது இடத்திலும், வெள்ளியை வாங்கும் நாடுகளில் முன்னிலையிலும் உள்ளது. இந்த வரி உயர்வு, தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை மேலும் அதிகரிக்கக்கூடும். சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்ந்து ரூ. 1,14,640 ஆகவும், ஒரு கிராம் ரூ. 230 உயர்ந்து ரூ. 14,330 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ. 300 ஆகவும், கிலோவுக்கு ரூ. 15,000 உயர்ந்து ரூ. 3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
