தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
உலகளாவிய பொருளாதார நிலையற்ற தன்மை, பண வீக்கம், வேலைவாய்ப்பின்மை, டாலர் மதிப்பு சரிவு போன்ற பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை இனிவரும் நாட்களில் குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக இந்த விலை உயர்வு அமைந்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தற்போதைய வட்டி விகிதத்தையே தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த முடிவுக்குப் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம் காணத் தொடங்கியது.
மேலும், அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளின் தாக்கமும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையை விறுவிறுவென அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த காரணங்களால், தங்கம் வாங்குவோர் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,100-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று ஒரு கிராமுக்கு ரூ.285 உயர்ந்து ரூ.13,385 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்து ரூ.1,07,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த நான்கு நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.5,240 அதிகரித்துள்ளது. இது நகை வாங்குவோர் மற்றும் முதலீடு செய்வோர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.210 ஆகவும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 10 ஆயிரமாகவும் நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.
தீபாவளிக்கு முன்னர் தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு இந்த திடீர் விலை உயர்வு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால், பலரும் நகை வாங்கும் திட்டத்தை தள்ளிப்போடும் சூழல் உருவாகியுள்ளது.
