நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, புகைப்படம் மற்றும் அடிப்படை விவரங்களை மட்டும் கொண்டு 'பால் ஆதார் அட்டை' வழங்கப்படுகிறது. இந்த குழந்தைகளுக்கு கைரேகை மற்றும் கருவிழிப் பதிவு தேவையில்லை.
எனினும், குழந்தைகள் 5 வயதை எட்டும்போது, ஆதார் மையங்களுக்கு நேரடியாகச் சென்று கைரேகைகள், கருவிழிகள் மற்றும் பிற பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்வது கட்டாயமாகும். மேலும், 15 வயதை அடையும்போதும் பயோமெட்ரிக்கை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
இந்த நிலையில், மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 2025 முதல், பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்களின் பயோ-மெட்ரிக்கை அப்டேட் செய்யும் பணிகளை மத்திய அரசு தொடங்கியது. மாநில அரசுகளுடன் இணைந்து இதுவரை 1.56 லட்சம் பள்ளிகளில் ஆதார் புதுப்பிப்பு முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், இதுவரை சுமார் 2 கோடி மாணவர்களுக்கு ஆதார் பயோ-மெட்ரிக் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, 5 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தங்களது பயோமெட்ரிக்கை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ள அரசு அவகாசம் வழங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 2025 முதல் ஓராண்டு காலத்திற்கு, இந்த பயோ-மெட்ரிக் புதுப்பிப்புக்கான கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பை இணையவழியில் செய்ய இயலாது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆதார் மையங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்றுதான் இந்தப் புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும். அருகிலுள்ள ஆதார் மையத்தை 'புவன் ஆதார் போர்டல்' (Bhuvan Aadhaar Portal) மூலமாக எளிதாகக் கண்டறியலாம்.
ஆதார் அட்டையைப் புதுப்பிக்க, குழந்தைகளின் ஆதார் அட்டையுடன் குழந்தையையும் ஆதார் மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு குழந்தைகளின் கைரேகைகள், கருவிழிப் படலம் மற்றும் புகைப்படம் ஆகியவை பதிவு செய்யப்படும். இந்தப் புதுப்பிப்பு முடிந்ததும், ஆதார் மையத்தில் 'புதுப்பிப்பு கோரிக்கை எண்' (URN) அடங்கிய ஒப்புதல் சீட் வழங்கப்படும். இந்த எண்ணைப் பயன்படுத்தி, தங்களது கோரிக்கையின் நிலையை அறிந்துகொள்ள முடியும்.
நாடு முழுவதும் இதுவரை 2 கோடி பள்ளி மாணவர்களின் ஆதார் பயோ-மெட்ரிக் வெற்றிகரமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி வரை, 5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பயோ-மெட்ரிக் புதுப்பிப்பு இலவசமாக மேற்கொள்ளப்படும். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
