திமுகவில் அடுத்த விக்கெட் விழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நில ஆக்கிரமிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் சிக்கியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் திமுக அமைச்சர்களான எ.வ.வேலு, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது தா.மோ. அன்பரசன் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். நிலத்தை ஆக்கிரமித்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2024 தேர்தல் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தர மறுப்பதாக, PCM Sons நிறுவனத்தின் ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் முதல்வர் தனிப்பிரிவில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். தா.மோ. அன்பரசனின் உதவியாளர் அறிவுறுத்தலின் பேரில், ஒதுக்கப்பட்ட இடத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக வாடகை கூட வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சட்டவிரோதமாக தனது சொத்தை குத்தகைக்கு எடுத்திருப்பதை சமீபத்தில்தான் தான் அறிந்ததாக ராஜேஷ் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். சென்னை செயின்ட் தாமஸ் மவுண்டில் உள்ள 5,500 சதுர அடி தனியார் நிலம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக அலுவலகமாக 6 மாத குத்தகைக்கு எடுக்கப்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குத்தகை காலம் முடிந்த பிறகும் அந்த இடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், குத்தகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட நபரின் முகவரி போலியானது என்றும், இதுவரை எந்த வாடகையும் செலுத்தப்படவில்லை என்றும், நிலத்தை நிரந்தரமாக வைத்துக்கொள்ள முயற்சி நடப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அவருக்கு தொடர்புடையோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று PCM Sons நிறுவனத்தின் ராஜேஷ் சோமசுந்தரம் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து புகார்கள் வருவது, திமுக தலைமைக்கு தலைவலியாக மாறியுள்ளது. குறிப்பாக, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற புகார்கள் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
