அதிமுகவில் இருந்து விலகுகிறேன்: முன்னாள் அமைச்சர் செம்மலை வேதனை பேட்டி

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் அதிமுகவில் முக்கியப் பொறுப்புகளை வகித்த முன்னாள் அமைச்சர் செம்மலை, தற்போது அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது மன வேதனையை வெளிப்படுத்தினார். "இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து எம்.ஜி.ஆருடனும், அதன் பிறகு ஜெயலலிதாவுடனும் பயணித்தேன். அவர்கள் எனக்கு அளித்த வாய்ப்புகளுக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். இன்று, கனத்த இதயத்துடன், வேதனையுடன் இந்த இயக்கத்திலிருந்து நான் விலகுகிறேன்," என்று அவர் உருக்கமாகக் கூறினார்.

மேலும், "அந்த இரண்டு ஆன்மாக்களிடம் எனது வருத்தத்தைத் தெரிவித்து மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எனது விலகலுக்குப் பிறகாவது, இந்த இயக்கம் கட்டிக்காக்கப்பட வேண்டும். இந்த இயக்கம் தமிழக அரசியலில் நிலையாக இருப்பதுதான் தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லது. இந்த இயக்கம் இருந்தால்தான் மக்களுக்குப் பாதுகாப்பு," என செம்மலை வலியுறுத்தினார். கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள், தங்களின் ஈகோவை விடுத்து, குறைபாடுகளைச் சரிசெய்து, இயக்கத்தைக் காப்பாற்றவும் வளர்க்கவும் வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மக்கள் இயக்கமாகத் தொடங்கப்பட்ட அதிமுக, மக்களிடமிருந்து விலகிச் செல்கிறதோ என்ற அச்சம் மக்களிடையே நிலவுவதை தான் உணர்வதாகவும் செம்மலை குறிப்பிட்டார். "கழகத்தில் முக்கிய நிர்வாகிகள் இதை உணர்ந்து இயக்கத்தைக் காக்க வேண்டும். நமக்குள்ளே ஒற்றுமை இருந்தால், வெளியில் இருந்து வரும் எந்த சதிவலையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உண்டு," என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தனியொருவர் ஆலோசனை கேட்காத நிலையில், கட்சியை வலுப்படுத்த மூத்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"போனது போக எஞ்சியிருப்பதையாவது தக்கவைக்க வேண்டும். யாரையும் நீக்கவோ, மற்றவர்களை ஒதுக்கவோ முயற்சிக்காமல், அனைவரும் ஒற்றுமையாக கழகத்தைக் காப்பதே எனது விருப்பம். கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்களை அனுமதிக்கக் கூடாது. கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் மனப்பான்மை இருக்கக் கூடாது. தங்களின் நலனை விடக் கட்சியின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்," என்று செம்மலை அறிவுறுத்தினார். மேலும், அதிமுகவை நடிகர் விஜய் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்றும், கட்சியை வலுவான இயக்கமாக காட்டத் தவறியதே காரணம் என்றும், இதில் விஜயையோ மற்றவர்களையோ குறை கூற முடியாது என்றும், அதிமுக தலைவர்களிடையே உள்ள ஈகோ பிரச்சனையே கட்சியைப் பலவீனப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். "கட்சியை வளர்க்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. அதிமுக பலவீனமடைந்து கொண்டே செல்கிறது. இனி இந்தப் பயணத்தில் தொடர என் மனம் இடமளிக்கவில்லை," என்று கூறி தனது விலகலை உறுதிப்படுத்தினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

அதிமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் செம்மலை!

சென்னை: அதிமுகவில் இருந்து மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை விலகுவதாக அறிவித்துள்ளார். இது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரான செம்மலை, சட்டசபை துணை சபாநாயகராகவும், அதிமுக அமைப்பு செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2009 முதல் 2014 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். இந்நிலையில், கட்சிக்குள் நடக்கும் நிகழ்வுகள் மிகுந்த மன வேதனையை அளிப்பதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிவிட்டு அவர் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

தனது விலகல் கடிதத்தில், "கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா!" என்ற வரியை குறிப்பிட்டுள்ள செம்மலை, கட்சி தொடங்கிய நாளிலிருந்து உழைத்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இதே மனநிலையில் தான் இருப்பதாகக் கூறியுள்ளார். நடக்கும் சம்பவங்கள் திருப்தி அளிக்கவில்லை என்றும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் இப்படி ஆகிவிட்டதே என வேதனை தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ்களும் 'உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது' என செய்தி வெளியிடும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி தனக்கு வழங்கிய வாய்ப்புகளுக்கும், அரசியலில் அங்கீகாரம் அளித்ததற்கும் நன்றி தெரிவித்துள்ளார். அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சுயநலமின்றி பணியாற்றி வந்ததாகவும், ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும், தடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், தலைமைக்கு கட்டுப்பட்டு தொடர்ந்து பணியாற்றியதாகவும், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க மனம் இடம் தரவில்லை என்றும், கனத்த இதயத்துடன் தனது பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version