108 ஆம்புலன்ஸ்: 1500 குழந்தைகள், 3 லட்சம் தாய்மார்களின் உயிர் காப்பு – அன்புமணி பெருமிதம்

தமிழ்நாட்டில் 108 அவசர ஊர்தி சேவையின் மகத்தான பங்களிப்பை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். 2025-26ஆம் ஆண்டில் மட்டும் 7.82 லட்சம் மகப்பேறுகள் நிகழ்ந்த நிலையில், அதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் ஆபத்தான தருணங்களில் 108 ஆம்புலன்ஸ் மூலம் உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக குழந்தை பெற்றெடுத்துள்ளனர். இது குறித்தான தகவல்களை EMRI Green Health Services நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஓராண்டில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றுவதில் 108 அவசர ஊர்திகள் ஆற்றிய பங்கை நினைத்து பெருமை கொள்வதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 1500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அவசர ஊர்திகளிலேயே பிரசவம் பார்த்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் மட்டும் 1888 குழந்தைகள் அவசர ஊர்திகளில் பிறந்துள்ளன. புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு 500 குழந்தைகளில் ஒரு குழந்தை அவசர ஊர்தியிலேயே பிறக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு, அவசர ஊர்தி சேவை என்பது நகரங்களில் உள்ள வசதியானவர்களுக்கு மட்டுமேயான ஒன்றாக இருந்தது. ஆனால், நான் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது, 2005-ல் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் 108 அவசர ஊர்தி சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தினேன். இதன் மூலம் கிராமப்புற மற்றும் ஏழை மக்களும் இந்த சேவையை பயன்படுத்தும் நிலை உருவானது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த 108 அவசர ஊர்தி சேவையால், தமிழ்நாட்டில் தாய்மார்கள் இறப்பு விகிதம் 2004-ல் 111 ஆக இருந்தது தற்போது 35 ஆகவும், குழந்தைகள் இறப்பு விகிதம் 35 ஆக இருந்தது 8.20 ஆகவும் கணிசமாக குறைந்துள்ளது. எனது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை, திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு எச்சரிக்கை, புகையிலைப் பொருட்களின் உறைகளில் எச்சரிக்கைப் படம், குட்கா தடை போன்ற திட்டங்களும் மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளாகும். இவை எனது பணிகளுக்கு சான்றாக என்றும் நிலைத்திருக்கும்.

தற்போது தமிழ்நாட்டில் 977 அடிப்படை வசதி கொண்ட அவசரகால ஊர்திகள், 307 மேம்படுத்தப்பட்ட ஊர்திகள், 65 பச்சிளங்குழந்தைகளுக்கான ஊர்திகள் என மொத்தம் 108 அவசர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கையை 2500 ஆக உயர்த்தினால், தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த சேவை மேலும் சிறப்பாக சென்றடையும். எனவே, தமிழக அரசு உடனடியாக 108 அவசர ஊர்திகளின் எண்ணிக்கையை 2500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version