முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்கு பதிவு: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் முன்னாள் பொறியாளர்கள் உட்பட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'அறப்போர் இயக்கம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 20.04.2022 அன்று அவர் அளித்த மனுவில், மார்ச் 2022-ல் கரூர் மற்றும் பிற பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இணைந்து, எந்தப் பணியும் செய்யாமலேயே பொதுப் பணத்தை முறைகேடு செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக, திருப்பூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்டத்தில், கரூர் உபகோட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக 'சங்கரானந்த் இன்ஃப்ரா' நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுமார் ₹7 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில், எந்த சாலையும் அமைக்கப்படாத நிலையில், 2022 மார்ச் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் ₹3.23 கோடி நிதி முறைகேடாக விடுவிக்கப்பட்டதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக ஏற்கனவே கரூரைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன் உட்பட 4 அதிகாரிகளும், ஈரோடு நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள் பிரிவைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் நிதிலன் உட்பட 5 அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முறைகேடு வெளிச்சத்திற்கு வந்ததும், குற்றத்திற்கான ஆதாரங்களை அழிக்கும் நோக்கில், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் கூட்டுச் சேர்ந்து இரவோடு இரவாக அவசர அவசரமாக சாலை அமைக்க முயன்றதாக புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கத்தின் புகாரைத் தொடர்ந்து, அரசு (பொதுத் துறை) கடந்த 23.06.2026 அன்று அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகம் (V&AC Headquarters Crime No.3/2026) ஜூன் 24, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version