தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகாவால் மேகதாது அணையை கட்ட முடியாது என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை தவறாக மேற்கோள் காட்டி மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறிய பதில், தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் கூறிய கருத்து அபத்தமானது மற்றும் ஆபத்தானது என்றும், அது முற்றிலும் தவறு என்றும் குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்த கட்டுமானத்தையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் ஒப்புதல் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில், பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை மறைத்துவிட்டு, சிலவற்றை மட்டுமே மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக துரைமுருகன் குற்றம் சாட்டினார். பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி தவறான செய்தியை வெளியிடுவது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.
மத்திய அமைச்சரின் கருத்தைக் கேட்ட பிறகு தனக்கு தூக்கமே வரவில்லை என்றும், ரத்தம் கொதிப்பதாகவும் துரைமுருகன் வேதனையுடன் தெரிவித்தார். தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா மேகதாது அணையை கட்ட முடியாது என்பதை அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தை தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார். அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த பிரச்சனையை தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேகதாது விவகாரத்தில் பெங்களூரு செல்லும் முதலமைச்சர், ஏன் டெல்லிக்கு சென்று மத்திய அரசிடம் வலியுறுத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பிய துரைமுருகன், மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் முதலமைச்சர் ரத்தம் துடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், யார் எதிரியாக இருந்தாலும் காவிரி பிரச்சனை என்றால் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள். ஆனால், சென்ட்ரல் போர்டு கமிஷனில் பாதி பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ. கபிலன் தலைமையிலான கும்பல் நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இதுகுறித்து முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் கூறினார்.

