2026ம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த முறை வரலாற்றில் இல்லாத வகையில் 48 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய நேரப்படி ஜூன் 12ம் தேதி தொடங்கி ஜூலை 20ம் தேதி வரை நடைபெறும் இத்தொடரின் இறுதிப்போட்டி நியூ ஜெர்சியில் நடக்கிறது.
மொத்தம் 48 அணிகள் 12 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் 4 அணிகள் இடம்பெறும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் சிறந்த 8 மூன்றாம் இட அணிகள் என மொத்தம் 32 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். இது உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக 'ரவுண்ட் ஆப் 32' நாக் அவுட் சுற்று அறிமுகமாகிறது. 39 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 104 போட்டிகள் நடக்கவுள்ளன. 48 நாடுகளைச் சேர்ந்த 1248 வீரர்கள் பங்கேற்கின்றனர். நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி இத்தொடரில் களமிறங்குகிறது.
இந்தியாவில், ஜீ நிறுவனத்தின் புதிய யுனைட் 8 ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களிலும், ஜீ5 செயலி மற்றும் இணையதளத்திலும் போட்டிகளை நேரடியாக காணலாம். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வர்ணனை வழங்கப்படும். போட்டிகள் அமெரிக்காவின் 11 நகரங்கள், கனடாவின் 2 நகரங்கள், மெக்சிகோவின் 3 நகரங்கள் என மொத்தம் 16 நகரங்களில் நடைபெறுகின்றன.
அமெரிக்காவில் அட்லாண்டா, பாஸ்டன், டல்லாஸ், ஹூஸ்டன், கன்சாஸ் சிட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி, நியூயார்க்/நியூ ஜெர்சி, பிலடெல்பியா, சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா, சியாட்டில் ஆகிய நகரங்களும், கனடாவில் டொராண்டோ, வான்கூவர் நகரங்களும், மெக்சிகோவில் மெக்சிகோ சிட்டி, குவாடலஜாரா, மான்டெர்ரி நகரங்களும் போட்டிகளை நடத்துகின்றன. ஜூன் 12ம் தேதி மெக்சிகோ சிட்டியில் மெக்சிகோ – தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியுடன் தொடர் தொடங்குகிறது.