தனது ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக இருப்பதாக இன்றைய முதல்வர் பிரச்சார மேடையில் பேசிய பந்தல் பிரிவதற்குள்ளேயே மதுராந்தகம் பகுதியில் ஒரு மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மதுராந்தகம் அருகே கொங்கரை பகுதியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி சிறுமி, வீடு புகுந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு சிறுமிக்கு தனது சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இல்லாத ஒரு ஆட்சியை நடத்தும் இன்றைய முதல்வர், எந்த முகத்தை வைத்துக் கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
'அண்ணன், தாய் மாமன்' என்று தனக்கு பிராண்டிங் செய்துகொள்ளும் இந்த நடிப்பு முதல்வர், பாதிக்கப்பட்ட இந்த சிறுமிக்கு அண்ணனாகவோ, தாய் மாமனாகவோ இருந்தால் இப்படி ஒரு நிகழ்வை நடக்க விட்டிருப்பாரா? ஆட்சி என்பது கவர்ச்சியான வார்த்தைகளால் நடத்துவது அல்ல, அது செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுராந்தகத்தில் மீண்டும் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் கால் வைக்கப் போகும் முதல்வர், இது போன்ற கொடூர சம்பவங்களுக்கான விளக்கத்தை அளிப்பாரா? அல்லது, வழக்கம் போல பிற கட்சிகளை நோக்கி வெறும் காற்றில் வாள் சுழற்றுவது மட்டும் தானா? என அவர் விமர்சித்துள்ளார்.
ரீல்ஸ் கன்டென்டிற்காக மட்டுமே ஆட்சியை நடத்தி, ரியல் ஆக்சனில் எதுவும் இல்லாத, தமிழகப் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொண்டுள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசுக்கு எனது கடும் கண்டனம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
