கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். "தமிழக வெற்றிக் கழக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது. ஆட்சிக்கு வந்து 110 நாட்களிலேயே பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்துகின்றனர். விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அரிசி, சமையல் எண்ணெய், சர்க்கரை, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டது. இதை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, அதிக அளவில் கடன் வாங்கியுள்ளனர். வருவாயை பெருக்க ஆக்கப்பூர்வமான திட்டங்கள் இல்லை. இவற்றைக் கொண்டு இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் எனத் தோன்றவில்லை" என அவர் கூறினார்.
சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "சட்டமன்ற நிகழ்வுகள் சினிமாவில் வருவது போல் உள்ளது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்தால், உறுப்பினர்கள் தங்கள் தொகுதிப் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது மக்களுக்குத் தெரியும். சபாநாயகர் தற்போது 10 மணி நேரம் சட்டமன்றத்தை நடத்துகிறார். நாளை மறுநாள் காவல்துறை மானியக் கோரிக்கை நடைபெற உள்ளது. அப்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து விரிவாகப் பேசுவோம். சட்டம் ஒழுங்கு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்" என்றார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். "தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. நிர்வாக சீர்கேட்டின் காரணமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன" என்று அவர் கவலை தெரிவித்தார்.
போக்குவரத்துத்துறையில் உள்ள விரைவு பேருந்துகளின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் அல்லது 5 லட்சம் கிலோமீட்டர் ஆகும். இதை நிதிப் பற்றாக்குறை காரணமாக 5 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோமீட்டராக மாற்றியிருக்கிறார்கள். ஆயுட்காலம் முடிந்த பேருந்துகளை இயக்குவது பாதுகாப்பற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து வருகிறது. சோதனை நடைபெற்ற இடங்களிலேயே இவ்வளவு பணம் சிக்குகிறது என்றால், சோதனை நடைபெறாத இடங்களில் எவ்வளவு இருக்கும்? தமிழ்நாடு முழுக்க ஊழல் நடைபெற்று வருகிறது" என அவர் கடுமையாக விமர்சித்தார்.
இதையடுத்து, முதலமைச்சர் விஜய் தனி விமானத்தில் பயணம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அவர் காஸ்ட்லி முதலமைச்சர். நாங்கள் விவசாயி. எனது நிலை வேறு, அவரது நிலை வேறு. முதலமைச்சர் விஜய் இந்தியாவின் பிரதமராகலாம், குடியரசுத் தலைவராகலாம். ஏன் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம். அது அவருடைய விருப்பம்" என்று பதிலளித்தார்.
அதிமுகவில் இருந்து வெளியேறிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தொடர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்வதால், அது செயல்படாது. இந்திய கூட்டணியில் அதிமுக தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தல் வரும்போது அதுகுறித்து பார்க்கலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.
