ஓட்டுநர் உரிமம்: 50 வயதுக்கு பின் புதுப்பித்தல்? மத்திய அரசின் புதிய திட்டம்!

ஓட்டுநர் உரிமம் தொடர்பான விதிகளில் மத்திய அரசு மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தற்போது 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், ஓட்டுநர்களின் 50 வயதுக்குப் பிறகு புதுப்பிக்கும் புதிய நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உதாரணமாக, ஒருவர் 20 வயதில் உரிமம் பெற்றால், தற்போது 40 வயதில் புதுப்பிக்க வேண்டும். புதிய நடைமுறைப்படி, அவருக்கு 50 வயதாகும் வரை உரிமம் செல்லுபடியாகும். இதனால் கூடுதலாக 10 ஆண்டுகள் உரிமம் பயன்பாட்டில் இருக்கும். 50 வயதைக் கடந்தவர்கள் உரிமம் பெற மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.

இந்த மாற்றங்களால் அடிக்கடி உரிமம் புதுப்பிக்க வேண்டிய அவசியம் குறையும் என்றும், பொதுமக்களின் நேரமும் பணமும் மிச்சமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகன உரிமை மாற்றம், வணிக வாகனங்களுக்கான அனுமதிப் பத்திரங்கள், முகவரி மாற்றம், நகல் உரிமம் பெறுதல் போன்ற பல்வேறு சேவைகளை இனி முழுமையாக இணையவழியில் மேற்கொள்ளும் வசதியையும் மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு (RTO) நேரில் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை குறையும் என்றும், சேவைகள் விரைவாகவும் வெளிப்படையாகவும் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து கட்டணங்களும் ஆன்லைன் மூலம் வசூலிக்கப்படுவதால் மாநில அரசுகளின் வருவாயில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிப்பதன் மூலம் நிர்வாகத் திறன் மேம்படும் என்றும் கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த தரவுத்தளத்தின் மூலம் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் தகவல்களை நாடு முழுவதும் எளிதாக சரிபார்க்கும் வசதியும் உருவாக்கப்பட உள்ளது. இது நிர்வாகத்தை மேலும் எளிதாக்கும்.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு எதிர்மறைப் புள்ளிகள் (Negative Points) வழங்கும் புதிய முறையையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. சிவப்பு விளக்கை மீறுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் இயக்குதல், ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் அணியாதது போன்ற விதிமீறல்களுக்கு குறிப்பிட்ட அளவு புள்ளிகள் குறைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி விதிமீறல்கள் பதிவானால், ஓட்டுநரின் உரிமத்தை தற்காலிகமாக இடைநீக்கம் செய்வது அல்லது நிரந்தரமாக ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாம். சாலை விபத்துகளை குறைத்து, பொறுப்பான ஓட்டுநர் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த மாற்றங்கள் வடிவமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version