மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து பரிசுகள் மற்றும் பண உதவிகளைப் பெறுவதற்கு மருத்துவர்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சந்தையில் ஒரே மூலப்பொருளுக்கு நூற்றுக்கணக்கான பிராண்ட் பெயர்களில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும், மருத்துவர்கள் தங்களது நிறுவனத்தின் பிராண்ட் பெயரை மருந்துச் சீட்டில் எழுதிக் கொடுக்க பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் பெறுவதாகவும் புகார்கள் எழுந்தன.
குறிப்பாக, தங்க நகைகள், வெளிநாட்டு சுற்றுலா ஏற்பாடுகள் போன்றவற்றை மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு வழங்குவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் யாரும் மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவிகளைப் பெறக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவும் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் கூறுகையில், 'சந்தைக்கு புதிதாக வரும் உயரக மருந்துகளைப் பரிந்துரை செய்வதற்காக சில மருத்துவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. விலை உயர்ந்த பொருட்களைப் பரிந்துரைப்பதால் பொது மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்' என்று தெரிவித்தனர்.
'இந்தச் செயலில் ஈடுபடும் மருத்துவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மருத்துவர்கள் யாராவது மருந்து நிறுவனங்களிடம் இதுபோன்ற கவனிப்புகளைப் பெறுவது தெரியவந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் அவர்கள் கூறினர். இந்த உத்தரவு, மருந்துப் பரிந்துரைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்றும், பொது மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.