தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, திமுக சார்பில் வரும் செப்.12-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை கொச்சைப்படுத்தி பேசியதாகக் கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
தங்களது ஆட்சியில் ஏற்பட்டுள்ள நிர்வாகத் தோல்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், மக்களை திசை திருப்பும் நோக்கில் முதல்வர் விஜய் கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத்தில் முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து, வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் 12.09.2026 சனிக்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையுலக கவர்ச்சியால் மக்களை மயக்கி, சமூக ஊடகங்கள் மூலம் போலியான பிம்பத்தைக் கட்டமைத்து, குழந்தைகளை ஏமாற்றி, குடும்பங்களுக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி, போலி வாக்குறுதிகள் அளித்து ஆட்சியைக் கைப்பற்றியதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ஆட்சி அமைக்கும் வலிமை பெற முடியாத நிலையில், திமுக கூட்டணியில் வென்றவர்களுக்கு அமைச்சர்கள் பதவியைக் கொடுத்து, அதிமுகவில் வென்றவர்களுக்கும் அமைச்சர் பதவி தருவதாக ஏமாற்றி, குதிரை பேரம் நடத்தி நடிகர் விஜய் முதலமைச்சராகியுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பொறுப்புணர்ந்து செயல்படவில்லை என்றும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், சில வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றி ஏமாற்றி வருவதாகவும் திமுக குற்றம் சாட்டியுள்ளது. திராவிட மாடல் ஆட்சி மூலம் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியதாகவும், நிறுத்த முடியாத திட்டங்களுக்குப் பெயரை மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் சிறப்பாகச் செய்து வருவதாகவும் விமர்சித்துள்ளது.
மாநிலத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் வன்முறை ஆகியவை அதிகரித்துள்ளன. பல்வேறு குற்றச்செயல்களில் த.வெ.க. நிர்வாகிகளே சிக்கி வரும் நிலையில், அவர்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாதுகாக்கும் வேலையில் அரசு ஈடுபடுவதாகவும், மக்கள் 'தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டோம்' என்று வருந்தி வருவதாகவும் திமுக குறிப்பிட்டுள்ளது.
இதிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக, தமிழ்நாடு சட்டமன்றத்தை முதலமைச்சர் விஜய் தனது டயலாக் சூட்டிங் மேடையாக மாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியையும், பொருளாதார மேதை முரசொலி மாறனையும், திருமணம் ஆன ஐந்தே மாதத்தில், 23 வயதில் MISA சட்டத்தில் கைதாகி சிறை சித்திரவதைகளை அனுபவித்து, ஓராண்டு காலம் சிறையில் இருந்த தியாகத்தைச் செய்த தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தியாகத்தையும் கொச்சைப்படுத்தி சட்டமன்றத்தில் விஜய் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்துக்குரியது என்றும், அரசியல் உலகில் இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றம் கண்டிருக்காது என்றும் திமுக தெரிவித்துள்ளது.
அவரது உரை மூலம் சட்டமன்றத்தின் மாண்பு, மரபு, வரலாறு அனைத்தும் காற்றில் பறப்பதாகவும், சட்டமன்றத்தில் சில அமைச்சர்கள் பேசுவது தவறு என்று தெரிந்தே பேசி, 'மீம்ஸ்', 'ரீல்ஸ்'-ஐ வெளியிடுவதாகவும், நேரலை மூலம் மக்களைச் சென்றடைந்த பிறகு அதை ஒப்புக்கு அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்வதாகவும், தந்திர மேடையாக சட்டசபையை த.வெ.க. அரசு பயன்படுத்துவதாகவும் திமுக குற்றம் சாட்டியுள்ளது.
ஆட்சியின் தோல்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதலமைச்சர் விஜய் மாறியுள்ளார் என்றும், அவரது இந்தப் பேச்சைக் கண்டிக்கும் வகையில், தி.முக. சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 12.09.2026 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டு முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
