நாம் தமிழர் கட்சியின் முக்கிய நபர்களில் ஒருவரும், பிரபல திரைப்பட இயக்குனருமான மு. களஞ்சியம், அக்கட்சியிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். இது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டு, களஞ்சியம் சீமானுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மாற்று அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிக்கொண்டு தனிநபர்கள் மீது தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைப்பது தனக்கு ஏற்புடையதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் 'தம்பிகள்' என்று அழைக்கப்படும் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் பரப்பும் வெறுப்பு அரசியலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மாற்று கருத்துடையோரை நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பது கட்சியின் நோக்கத்தையே சிதைப்பதாகவும் களஞ்சியம் பகிரங்கமாக சாடியுள்ளார்.
இதுபோன்ற தரம் தாழ்ந்த வெறுப்பு அரசியல் போக்குகளை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டும் காணாமல் கடந்து செல்வது தனக்கு ஏமாற்றமளிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் நீண்ட காலம் உழைத்தவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தராமல், தன்னிச்சையான மற்றும் ஒருதலைப்பட்சமான போக்கில் முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், இதனை தட்டிக்கேட்க முடியாத சூழல் நிலவுவதாகவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
கடந்த சில தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய வேட்பாளராகவும், கொள்கை பரப்பு முகமாகவும் செயல்பட்ட இயக்குனர் களஞ்சியத்தின் இந்த திடீர் விலகல், கட்சிக்குள் நிலவும் உள்விவகாரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே சில முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், களஞ்சியத்தின் இந்த பகீர் புகார் மற்றும் விலகல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் உறுப்பினர்களே சக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது வெறுப்பு அரசியலையும் இழிவான விமர்சனங்களையும் கையாள்வது, நாம் முன்னெடுக்கும் தமிழ்த்தேசிய பண்பாட்டிற்கு உகந்ததல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக சீமான் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.
இயக்குநர் களஞ்சியத்தின் இந்த விலகல், நாம் தமிழர் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது கட்சித் தலைமைக்கு ஒரு முக்கிய சவாலாகவும் அமைந்துள்ளது.
