திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலனூரில் திமுக நிர்வாகியிடம் இருந்து 7 லட்சத்து 63 ஆயிரத்து 400 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அக்டோபர் 6ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், த.வெ.க., தி.மு.க, அ.தி.மு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதேபோல், தாராபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தாராபுரம் தொகுதிக்குட்பட்ட மூலனூர் காவல் நிலைய எல்லைக்குள், மூலனூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் இருந்து 7 லட்சத்து 63 ஆயிரத்து 400 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் திமுகவின் மூலனூர் நகர் 6-வது வார்டு செயலாளராக உள்ளார்.
இதற்கு முன்னர், விஸ்வநாதன் என்பவரிடம் இருந்து 40 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பணத்தை வைத்திருந்த ஃபைனான்ஸ் விஸ்வநாதன், திமுகவின் மூலனூர் பேரூர் கழக அவைத் தலைவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாராபுரம் தொகுதியில் தேர்தல் பணப்பட்டுவாடாவுக்காக வைக்கப்பட்டிருந்த இந்தப் பணம் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
