தமிழ்நாட்டில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத ஆளும் திமுக அரசின் அலட்சியப் போக்கையும், நிர்வாக சீர்கேட்டையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாகவும், இதனால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையையும், வேதனையையும் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை மாநகரத்தில் மட்டும் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 16,577 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாகவும், டெங்கு காய்ச்சலால் இதுவரை 9 பேர் உயிரிழந்த துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும் சீமான் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த ஆறுதலையும், துயரில் பங்கெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக சளி, காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் அனைவரையும் எளிதில் தாக்கி வருவதாகவும், குறிப்பாக கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தினமும் சுமார் 300 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்படுவதால், மக்களிடையே பயமும் பீதியும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகள் இந்த அச்சத்தை மேலும் அதிகமாக்குகின்றன. டெங்கு காய்ச்சலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடியாமல் மக்கள் தவித்து வருவதாகவும் சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதித்தவர்கள் குவிந்து வரும் நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாமல் தமிழ்நாடு சுகாதாரத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் உயிரோடு விளையாடும் சுகாதாரத்துறையின் மெத்தனமான அணுகுமுறை நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என சீமான் சாடியுள்ளார்.
தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளைத் தடுக்க, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். சிறப்பு மருத்துவர் குழுவை அமைத்து, டெங்கு காய்ச்சல் குறித்த விளக்கங்கள், முன்னெச்சரிக்கை தகவல்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை உடனடியாக வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் தமிழ்நாட்டின் மாநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்றும், மக்களை டெங்கு பாதிப்பிலிருந்து பாதுகாக்க அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு கஷாயம், கபசுர குடிநீர் போன்ற நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தமிழர் பாரம்பரிய மருந்துகளைப் போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக சீமான் வலியுறுத்தியுள்ளார்.
