தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. நடப்பாண்டில் மட்டும் 9,000-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டில், தமிழகத்தில் 23,407 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டதாகவும், இதில் 12 பேர் உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. டெங்கு பாதிப்பு பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகரிக்கும் நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே பாதிப்பு அதிகரித்துள்ளது.
டெங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாக தீவிர காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, மூட்டு மற்றும் தசை வலி, உடல் சோர்வு, தோலில் சிவப்பு நிற தடிப்புகள் ஆகியவை காணப்படுகின்றன. இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.
டெங்கு பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் காய்ச்சல் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்பு குறித்த கண்காணிப்பு அறிக்கைகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் பிற பருவகால நோய்களுக்கான பரிசோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கொசுக்களை அழிக்கும் பணிகளிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக தினமும் 25,000-க்கும் மேற்பட்ட DBC பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெங்கு பரவலைத் தடுக்க பொதுமக்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். டெங்கு கொசுக்கள் சுத்தமான நீரில் உற்பத்தியாவதால், வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். பழைய டயர்கள், தேவையற்ற பாத்திரங்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் அல்லது மூடி வைக்க வேண்டும்.
ஏடிஸ் கொசுக்கள் பொதுவாக பகல் நேரங்களில் கடிப்பதால், தூங்கும் நேரங்களில் கொசுவலைகளைப் பயன்படுத்துவது நல்லது. மேலும், ஜன்னல் மற்றும் கதவுகளில் கொசுவலைகளைப் பொருத்துவதும், முழுக்கை சட்டைகளை அணிவதும் கொசுக்கடியைத் தவிர்க்க உதவும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
