கோவை மாவட்டம் சூலூர் அருகே, வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், சிறுமியின் உடல் கண்ணம்பாளையம் குளக்கரை அருகே உள்ள தென்னந்தோப்பு புதரில் வீசப்பட்டது. இது தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி கார்த்திக் (வயது 33) மற்றும் உடந்தையாக இருந்த அவரது நண்பர் மோகன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்ய முயன்றபோது, கார்த்திக் வீட்டின் 2-வது மாடியில் இருந்து குதித்ததில் அவரது கை, கால்கள் முறிந்தன. இதனால் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மோகனை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், சில தினங்களுக்கு முன்பு கைதிகளுக்கான சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த வழக்கில் கைதான கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், ஓராண்டு காலம் சிறையில் இருந்து வெளியே வர முடியாது.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சிறுமி பாலியல் வழக்கில், விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விஜய் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.