கோவை மாவட்டம், சூலூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வீடு திரும்பாதது மிகுந்த வேதனையளிக்கிறது.
இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து, குறுகிய காலத்திலேயே தீர்ப்பு வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், உளவியல் ரீதியான ஆதரவும் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரிய விஷயம். சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் அரசும், காவல்துறையும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புற புறநகர் பகுதிகளில் கண்காணிப்பு, இரவு ரோந்து, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆகியவை வலுப்படுத்தப்பட வேண்டும். பெண்களும் குழந்தைகளும் அச்சமின்றி வாழக்கூடிய பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்க அரசு உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கொடூர சம்பவம் மீண்டும் நிகழாத வகையில் நிரந்தரமான பாதுகாப்பு அமைப்புகளை அரசு உருவாக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
