தவெக அமைச்சர்களின் அணுகுமுறை: விமர்சனமும் வரவேற்பும்

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இந்த குறுகிய காலத்தில், சில அமைச்சர்களின் பேச்சுக்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், சிலரின் செயல்பாடுகள் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளன. முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில், செங்கோட்டையனைத் தவிர மற்ற அனைவரும் புதிய முகங்கள். இவர்களில் பெரும்பாலோர் இளைஞர்களாக இருப்பது தமிழக மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது. தங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போன்ற, எளிமையானவர்கள் அதிகாரத்தில் அமர்ந்திருப்பதை மக்கள் ஆச்சரியத்துடனும் வரவேற்புடனும் காண்கின்றனர்.

ஆட்சி மற்றும் நிர்வாகம் தொடர்பாக தவெக அரசு எடுக்கும் சில முடிவுகள் விமர்சனங்களுக்கு உள்ளாகும்போது, அவற்றை மாற்றியமைக்கும் போக்கையும் காண முடிகிறது. உதாரணமாக, ஜோதிடர் ராதன் பண்டிட்டின் நியமனத்தை அரசு உடனடியாக ரத்து செய்தது. ஆளுநர் மாளிகையில் நடந்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாக்களில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது பரவலான எதிர்ப்பை சந்தித்தது. இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 'எங்கள் அரசு எப்போதும் தமிழுக்கே முதலிடம் கொடுக்கும். உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படியே வந்தேமாதரம் முதலில் பாடப்பட்டதாக ஆளுநர் பதிலளித்தார். தமிழக அரசின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்படும்' என்று நம்பிக்கை அளித்தார்.

பிஎம்ஸ்ரீ திட்டம் மற்றும் மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், 'எங்களின் கொள்கை இருமொழிக் கொள்கையே. அதனையே எங்கள் அரசு உறுதியாக பின்பற்றும்' என்று அழுத்தமாகத் தெரிவித்தார். மேலும், 'கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டிருந்தாலும், மாணவர்களுக்குப் பயனுள்ள எந்தத் திட்டங்களும் நிறுத்தப்படாது. அந்த வகையில், காலை உணவுத் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்' என்றும் அவர் உறுதிபடக் கூறினார். கோடைக் கால மின்வெட்டு அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து, மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார், மின்சாரத் துறையில் பல்வேறு ஆய்வுகளை நடத்தி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், சில அமைச்சர்களின் கருத்துகள் விமர்சனங்களையும் சிக்கல்களையும் சந்தித்துள்ளன. சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், '8,000 தனியார் மருத்துவமனைகள் திறக்க தற்காலிக அனுமதி வழங்கப்படும்' என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு மருத்துவமனைகளை வலுப்படுத்தாமல், தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிப்பதாக கேள்விகள் எழுந்தன. இதற்கு விளக்கமளித்த மருத்துவத் துறை, '2019 முதல் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை வெளிப்படையான முறையில் பரிசீலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதிதாக 8,000 மருத்துவமனைகள் துவங்குவதற்கு உண்டான எந்த விதமான அறிவிப்பும் வழங்கப்படவில்லை' எனத் தெளிவுபடுத்தியது. மேலும், அமைச்சர் அருண் ராஜ், 'இனிவரும் காலங்களில் தமிழக அமைச்சர்களும், தவெக எம்எல்ஏக்களும் அரசு மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெறுவார்கள்' எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அமைச்சர் செங்கோட்டையன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதை நெட்டிசன்கள் விமர்சித்தனர். இதற்கு விளக்கமளித்த செங்கோட்டையன், 'இது என் உறவினர் மருத்துவமனை. இங்கு சிகிச்சை பெறுவது வழக்கம். இங்கு இலவசமாக சிகிச்சை கிடைப்பதால் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இல்லை' என்று கூறினார்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், செய்தியாளர் சந்திப்பில் தனது துறையை மறந்து 'சுற்றுலாத் துறை' என பலமுறை கூறியது இணையத்தில் பகடிக்கு உள்ளானது. விருதையின் மகள் கீர்த்தனா, மாண்புமிகு அமைச்சரான உடனேயே 'மாற்றுத் திறனாளிகள்' குறித்து பேசியது கண்டனங்களுக்கு உள்ளானது. பின்னர், 'நானே மாற்றுத் திறனாளி தாயின் மகள் தான்' என சமாளித்தார். கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை குறித்து கேட்டபோது, 'அரசியல் தொடர்பாக இப்போது பேச வேண்டாம்' என சிரித்தபடி சென்றதாக விமர்சனங்கள் எழுந்தன. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், மதுபாட்டில்களுக்கு ரூ.10 வாங்குவதற்கு காரணம் கற்பித்து விளக்கமளித்த வீடியோ வைரலானது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், திருவானைக்காவல் கோயில் பிரசாதக் கடையில் ஆய்வு செய்தபோது, முறுக்கு தயாரிப்பு தேதி குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி அதிர்ச்சியடைய வைத்தார். தவெக அரசு பதவியேற்று இரு வாரங்களே ஆன நிலையில், கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், மின்வெட்டு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. இந்த நேரத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகளால் அரசுக்கு கூடுதல் சுமை ஏற்படாமல் இருந்தால் நல்லது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version