கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள், தங்கள் உயரதிகாரிகளால் வெளியில் சென்று பொருட்களை விற்கும்படி கட்டாயப்படுத்தப்படுவதாகவும், மிரட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விற்பனை நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை, மழை வெயில் பாராமல் சாலைகளில் அலைந்து பொருட்களை விற்று வருமாறு உயரதிகாரிகள் வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு பொருட்களை விற்கவில்லை என்றால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் அல்லது மெமோ வழங்கப்படும் என எச்சரிக்கப்படுவதாகவும், இதனால் அப்பெண் ஊழியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருவதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
சாதாரண ஊழியர்களின் நிலைமையை அதிகாரிகள் புரிந்துகொள்வதில்லை என்றும், அவர்களின் சிரமங்களைக் கருத்தில் கொள்வதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முன்னதாக, 2012 ஆம் ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக சகாயம் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றபோது, கடனில் தத்தளித்த கைத்தறித் துறையை சர்வதேச அளவில் புகழ்பெறச் செய்தார். வேட்டி தினம், தாவணி தினம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியதுடன், தேசிய விருதுகளையும் பெற்றுத் தந்தார். அரசு ஊழியர்களை கோ-ஆப்டெக்ஸ் ஆடைகளைப் பயன்படுத்த ஊக்குவித்ததுடன், அரசு அலுவலகங்களில் விற்பனை ஸ்டால்கள் அமைக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பொருட்களை வாங்க வைக்கவும் அவர் நடவடிக்கை எடுத்தார்.
ஆனால், தற்போதைய மேலாண்மை இயக்குநர் இன்னசெண்ட் திவ்யா, விற்பனை நிலையங்களை மூடுவது, சேலையைத் தவிர வேறு எதையும் கொள்முதல் செய்ய வேண்டாம் என தடை விதிப்பது போன்ற தொடர்ச்சியான தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், சில உயரதிகாரிகள் பெண் ஊழியர்களை மிரட்டும் செயல்களை அவர் தட்டிக் கேட்காமல் மௌனம் சாதிப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முதல்வர் விஜய்யின் நெருங்கிய உறவினராகக் கூறப்படும் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் நிறுவனத்தில் இப்படி நடந்தால், மற்ற துறைகளில் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்று தொழிலாளர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த சூழலில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பணிச்சூழல் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அதிகாரிகள் மிரட்டல் சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண் ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தொழிலாளர் நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த விவகாரம் குறித்து அரசு உரிய கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
