சென்னையில் இருந்து நவம்பர் 20-ஆம் தேதி காலை 9 மணிக்கு தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் திருச்சிக்கு பயணம் செய்கிறார். காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை அடையும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக புத்தூர் பகுதிக்கு செல்கிறார். வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர்.
புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூபாய் 110 கோடி மதிப்பீட்டில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்க உள்ளார். பின்னர், மருத்துவமனையின் வசதிகளை அவர் பார்வையிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து, அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டல் வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் பங்கேற்கிறார். இந்த விழாவில், பல கோடி ரூபாய் மதிப்பிலான நிறைவடைந்த திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் உள்ளார்.
மேலும், கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டத்திலும் முதலமைச்சர் விஜய் ஈடுபடுகிறார். அன்று பிற்பகலில் திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், திருச்சி விமான நிலையத்திலிருந்து புத்தூர் அரசு மருத்துவமனை வரையிலான முக்கிய சாலைகளில் உள்ள தடுப்புச் சுவர்களின் இருபுறமும் வர்ணம் பூசும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
சாலைகளின் இருபுறமும் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு, அப்பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையின் முகப்பு மற்றும் சுற்றுச்சுவர்களுக்குப் புதுப்பொலிவூட்டும் வகையில் வர்ணம் பூசும் பணிகள் நடைபெறுகின்றன. மேலும், மருத்துவமனை வளாகத்திற்குள் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலமைச்சரின் வருகையையொட்டி, திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வருகை, திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

