5 மணி நேரத்தில் குழந்தை மீட்பு: தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு

ராயபுரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை வெறும் 5 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்ட தனிப்படை காவல்துறையினரை சென்னை காவல் ஆணையர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். முகலிவாக்கத்தைச் சேர்ந்த கீதா என்பவர், கடந்த 13-ம் தேதி ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 15-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

மருத்துவமனையில் கீதாவுக்கு அறிமுகமான கொடுங்கையூரைச் சேர்ந்த அமுலுக் பவரோஸ் மேரி என்ற பெண், டிஸ்சார்ஜ் ஆன பிறகு குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, 9 நாட்களே ஆன குழந்தையை கடத்திச் சென்றார். இது தொடர்பாக ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, கடத்தப்பட்ட குழந்தையை 5 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டனர். மேலும், குழந்தையை கடத்திய அமுலுக் பவரோஸ் மேரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் தாமஸ் ஆகிய இருவரையும் கடந்த 24-ம் தேதி கைது செய்தனர்.

இந்த துரித நடவடிக்கையை மேற்கொண்ட ராயபுரம் உதவி ஆணையர் பிரமானந்தன், காசிமேடு சட்டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் மைனசாமி, உதவி ஆய்வாளர் கோபிநாத், தலைமைக் காவலர்கள் ஜீவா, கோபிநாத், முத்துகுமார், இளங்கோவன் ஆகிய 7 பேரை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று நேரில் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version