காவிரி நீர்: ஜூன் மாதத்துக்கான 9.91 டிஎம்சி வழங்க வலியுறுத்தல்

தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 9.91 டிஎம்சி காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. டெல்லியில் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டத்தில், தமிழகத்தின் உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு காணொலி காட்சி மூலம் பங்கேற்று தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்தார்.

கூட்டத்தில் பேசிய தமிழக உறுப்பினர், மேட்டூர் அணையில் தற்போது 40.742 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளதாகவும், குடிநீர், தொழிற்சாலை பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக வினாடிக்கு 1,003 கன அடி நீர் திறந்து விடப்படுவதாகவும் தெரிவித்தார். நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் (2025-26) ஜூன் 1 முதல் மே 24 வரை பில்லிகுண்டுலுவில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவு 176.685 டிஎம்சி ஆகும். இதுவரை கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் உட்பட மொத்தம் 329.166 டிஎம்சி நீர் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது.

கர்நாடக உறுப்பினர், தாங்கள் வழங்கிய உபரி நீரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், இதனை தமிழக உறுப்பினர் சத்யபிரதா சாகு எதிர்த்தார். கர்நாடகம் தனது நீர்த்தேக்கங்களில் தேக்க முடியாமல் வெளியேற்றிய உபரி நீரை தங்களுக்கு சாதகமாக சொந்தம் கொண்டாட முடியாது என்றும், அதனை தமிழகத்திற்கு வழங்கிய கணக்கில் சேர்க்க இயலாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, மே 26 அன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும், இப்பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளதாலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், வரும் ஜூன் மாதத்திற்கு தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய 9.91 டிஎம்சி நீரை பில்லிகுண்டுலுவில் கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் காவிரி நீர்மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version