சென்னை மாநகராட்சியில் 284 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டிருந்த நடைபாதை அமைக்கும் பணிக்கான 35 டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. திட்ட அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள், செலவை செயற்கையாக உயர்த்தி காட்டியது, குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக டெண்டர் வடிவமைக்கப்பட்டது போன்ற முறைகேடுகள் அம்பலமானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திட்ட அறிக்கையை ஆய்வு செய்தபோது, ஒட்டுமொத்த செலவை செயற்கையாக உயர்த்தி காட்டியிருப்பது தெரியவந்தது. மேலும், ஒரு சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமான முறையில் இந்த டெண்டர்கள் வடிவமைக்கப்பட்டிருந்ததும் மாநகராட்சியின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாத பல கூடுதல் பணிகளைச் சேர்த்து, அதன் மூலம் அரசுக்கு மிகப்பெரிய அளவில் நிதி இழப்பை ஏற்படுத்த முயன்றதும் அம்பலமாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, பிப்ரவரி 19-ஆம் தேதி சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிய நடைபாதைகள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு மேயர் பிரியா ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 20-ஆம் தேதி 35 பிரிவுகளாக இதற்கான டெண்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. அடையாறு சாஸ்திரி நகர், பெசன்ட் நகர், ராஜா முத்தையா சாலை, கீழ்ப்பாக்கம் பர்னாபி ரோடு, மயிலாப்பூர் டாக்டர் பி.எஸ். சிவசாமி சாலை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் உயர்தர நடைபாதைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஒவ்வொரு பேக்கேஜின் மதிப்பு 8 கோடி ரூபாய் முதல் 9 கோடி ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டு, ஒட்டுமொத்த திட்ட மதிப்பு 284 கோடி ரூபாயாகக் கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், கள நிலவரப்படி ஒவ்வொரு பேக்கேஜ் பணிகளுக்கும் அதிகபட்சமாக 1.5 கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை மட்டுமே உண்மையான செலவு வரும் எனக் கூறப்படுகிறது. திட்டத்திற்கான உண்மையான மதிப்பீட்டை விட சுமார் 4 மடங்கு வரை தொகையை உயர்த்திக் காட்டியது, சில ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் பேசி டெண்டர் மதிப்பை முன்கூட்டியே தங்களுக்குச் சாதகமாக நிர்ணயம் செய்தது போன்ற முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. இதனால் சென்னை மாநகராட்சிக்கு மிகப்பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்படும் என்பது உறுதியானதை அடுத்து, தற்போது இந்த 35 டெண்டர்களும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் சென்னை மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.