சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு முக்கிய புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று (16.05.2026) முதல், சென்னை மெட்ரோவின் கட்டம்-1 ரயில்களில் 'இழுபடுதலைத் தடுக்கும் வசதி' (Anti-Drag Feature) பொருத்தப்பட்ட முதல் ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய பாதுகாப்பு அம்சம், மெட்ரோ ரயில் கதவுகள் மூடும் போது பயணிகளின் மெல்லிய உடமைகள், துப்பட்டா, பைகள் போன்றவற்றின் பட்டைகள் போன்றவைகள் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொள்வதைத் தடுக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியச் சூழலைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், சிக்கிக்கொள்ளும் பொருட்களை உடனடியாகக் கண்டறிந்து, ரயில் தானாகவே நின்றுவிடும். பின்னர், சிக்கிய பொருள் அகற்றப்பட்டதும் ரயில் மீண்டும் இயக்கப்படும். இது பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும்.
இந்த அதிநவீன பாதுகாப்பு வசதி, இந்திய மெட்ரோ ரயில் வரலாற்றில் முதல் முறையாக சென்னை மெட்ரோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது EN 14752:2025 சர்வதேச தரத்தின்படி உலகிலேயே முதல் முறையாக சென்னை மெட்ரோவில் கொண்டுவரப்பட்டதாகக் கருதப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மனோஜ் கோயல் இந்த ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நிறுவனத்தின் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த 'ஆன்டி-டிராக்' வசதி, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 'Obstacle Detection' தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும். இதன் மூலம், கதவுகளில் ஏதேனும் பொருட்கள் சிக்கினால், ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதவாறு கதவுகள் திறக்கப்பட்டு, சிக்கிய பொருள் அகற்றப்படும். இந்தச் சிறப்பான பாதுகாப்பு வசதியை ஓசூரைச் சேர்ந்த Faiveley Transport Rail Technologies India Pvt Ltd மற்றும் பெங்களூரைச் சேர்ந்த Alstom Transport India Limited ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து சென்னை மெட்ரோ உருவாக்கியுள்ளது. தற்போது முதல் ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி, கட்டம்-1ல் உள்ள மற்ற 51 ரயில்களிலும் விரைவில் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
