தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதையின் காரணமாக, சென்னையில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. குறிப்பாக அடையாறு, மயிலாப்பூர், தாம்பரம், பெருங்குடி, தரமணி, கிண்டி, வேளச்சேரி, பல்லாவரம், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பதிவானது. இந்த திடீர் கனமழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான வானிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னையில் பெய்த இந்த கனமழையின் தாக்கம், சென்னை விமான நிலையத்திலும் எதிரொலித்தது. மீனம்பாக்கம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 15 விமானங்களின் சேவைகள் தாமதமாயின. அபுதாபி, டெல்லி, கவுகாத்தி, கோவை, திருச்சி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள், வானிலை சரியாக இல்லாததால் தரையிறங்க முடியாமல் சிறிது நேரம் வானில் வட்டமடித்து பின்னர் பாதுகாப்பாக தரையிறங்கின. இதேபோல், சென்னையிலிருந்து டெல்லி, பெங்களூரு, மும்பை, அபுதாபி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதத்துடன் இயக்கப்பட்டன.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை முன்னறிவிப்பு, வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழலை எதிர்பார்க்கும் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
