இன்று ஆகஸ்ட் 22, சென்னை மாநகரம் தனது 387-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நாள், சென்னை நகரம் உருவானதைக் குறிக்கிறது.
இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், 1600-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியை நிறுவினர். முதலில் மசூலிப்பட்டினத்தில் தங்கள் வணிகத்தைத் தொடங்கிய அவர்கள், பின்னர் தென்னிந்தியாவில் ஒரு புதிய வணிக மையத்தை அமைப்பதற்காக, ஆண்ட்ரூ கோகன் மற்றும் பிரான்சிஸ்டே ஆகியோரின் தலைமையில் ஒரு இடத்தை தேடினர். உள்ளூர் நாயக்க மன்னர்களான டமர்லா வெங்கடபதி நாயக் மற்றும் அய்யப்ப நாயக்கர் ஆகியோரிடமிருந்து கூவம் ஆற்றின் அருகே இருந்த மதராசப்பட்டினம் என்ற பகுதியை ஆங்கிலேயர்கள் வாங்கினர். இந்த நிலப் பரிவர்த்தனைக்கான ஒப்பந்தம் 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ந்தேதி கையெழுத்தானது. இந்த நாளையே நாம் இன்று சென்னை தினமாக கொண்டாடுகிறோம்.
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1640-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டத் தொடங்கினர். இந்தக் கோட்டையைச் சுற்றியே நகரம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடையத் தொடங்கியது. 1653-ம் ஆண்டு வரை கட்டுமானப் பணிகள் நடைபெற்ற இந்த கோட்டையைச் சுற்றி, ஆங்கிலேயப் பணியாளர்கள் மற்றும் பிற மக்கள் குடியேறினர். கோட்டைக்கு அருகில் இருந்த திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் போன்ற பழமையான கிராமங்களும் நகர வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தன.
புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியுள்ள ஆங்கிலேயர்கள் வசித்த பகுதி 'வெள்ளை நகரம்' என்றும், இந்தியர்கள் வாழ்ந்த பகுதி 'கருப்பு நகரம்' என்றும் அழைக்கப்பட்டன. கோட்டை அமைந்திருந்த பகுதி பொதுவாக 'ஜார்ஜ் நகரம்' என அறியப்பட்டது. நிலம் வழங்கிய மன்னர் டமர்லா வெங்கடபதி நாயக்கின் தந்தை சென்னப்ப நாயக்கின் நினைவாக, அப்பகுதிக்கு 'சென்னப்பட்டினம்' என்ற பெயரும் சூட்டப்பட்டது. இதனால், மதராசப்பட்டினம் மற்றும் சென்னப்பட்டினம் ஆகிய இரு பெயர்களுக்கும் இடையே ஒரு குழப்பம் நிலவியது. நாளடைவில், கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் இணைந்து 'மெட்ராஸ்' என்ற பெயரில் அழைக்கப்பட்டன.
ஆங்கிலேயர்கள் மயிலாப்பூர், சாந்தோம், சிந்தாதிரிப்பேட்டை போன்ற பகுதிகளை மெட்ராஸ் நகரத்துடன் படிப்படியாக இணைத்து விரிவுபடுத்தினர். திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு போன்ற கிராமங்களும் மெட்ராஸ் நகரத்துடன் இணைக்கப்பட்டன. 1688-ம் ஆண்டு, மெட்ராஸ் பகுதிக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் மூலம், இந்தியாவின் முதல் நகராட்சியாக சென்னை திகழும் பெருமையைப் பெற்றது.
பிரிட்டிஷ் அரசின் கீழ், நான்கு இந்திய குடியிருப்புகளை இணைத்து 'மெட்ராஸ் மாகாணம்' உருவாக்கப்பட்டது. இது இந்திய ஆங்கிலேய ஆட்சியின் ஒரு முக்கிய பகுதியாக விளங்கியது. மெட்ராஸ் மாகாணத்தை மற்ற நகரங்களுடன் இணைக்க ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. மேலும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், காவல்துறை, நீதிமன்றம், ஐகோர்ட், மாநில கல்லூரி, சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற முக்கிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.
சுதந்திரத்திற்குப் பிறகு, 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணம் ஒரு தனி மாநிலமாக ஆனது. பல போராட்டங்களுக்குப் பிறகு, 1969-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணம் 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் தலைநகரமாக இருந்த மெட்ராஸ், 1996-ம் ஆண்டு 'சென்னை' எனப் பெயர் மாற்றம் பெற்றது. அதன் பிறகு, சென்னை நகரம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து, பெருநகர சென்னை மாநகராட்சியாக விரிவடைந்துள்ளது.
பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாடுகளை ஒருங்கே கொண்ட சென்னையில், பல மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் சுமூகமாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது 1 கோடியே 22 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, மருத்துவம், அறிவியல், போக்குவரத்து, பொழுதுபோக்கு என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. 'தென் இந்தியாவின் நுழைவாயில்' என்று அழைக்கப்படும் சென்னை, இந்தியாவிலேயே அதிக ஆலயங்கள், சிறந்த மருத்துவ வசதிகள், அதிக கார் உற்பத்தி, மற்றும் வளர்ந்து வரும் ஐ.டி. தொழில் எனப் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இடங்களும், பழமையான கட்டிடங்களும் சென்னையின் பெருமையை பறைசாற்றுகின்றன. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பிறந்த நாளை அனைவரும் கொண்டாடி மகிழ்வோம்.
