வளைகுடா நாடுகளில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வகுத்துள்ள மதிப்பீட்டு முறை பாரபட்சமானது என்றும், இதில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் முறையிட்டுள்ளனர். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்க ஒப்புக்கொண்டது.
நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அலோக் ஆராதே அடங்கிய அமர்வு, 30 பள்ளி மாணவர் கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட தனித்தேர்வர்கள் தொடர்பாக கடந்த ஜூன் 21 அன்று வெளியிடப்பட்ட மதிப்பீட்டு கொள்கையை எதிர்த்து 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தாக்கல் செய்த தனி மனுவுக்கும் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் கிஷோர் சௌதரி, சிபிஎஸ்இ வகுத்துள்ள மதிப்பீட்டு முறையில் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மனுக்களின் நகல்களை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அலுவலகத்துக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் வினீத் ஜிந்தாலும் ஆஜரானார்.
மாணவர்களின் முக்கிய கோரிக்கைகளாக, மார்ச் 27 அன்று அறிவிக்கப்பட்ட மதிப்பீட்டு முறை பாரபட்சமாகவும், நியாயமற்றதாகவும் இருப்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் அல்லது மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறை வெளிப்படையாகவும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதாகவும் இருக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வை நடத்த வேண்டும் என்றும், சிறப்புத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அல்லது முந்தைய மதிப்பீட்டு முறையின் மதிப்பெண் – இதில் எது மாணவர்களுக்குச் சாதகமாக உள்ளதோ, அதைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, கடந்த ஜூன் 22ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், வளைகுடா பகுதியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட தனித்தேர்வர்களுக்காக சிபிஎஸ்இ புதிய மதிப்பீட்டு கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
வளைகுடா நாடுகளில் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என இரண்டு குழுக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்குப் பள்ளி அளவிலான உள்மதிப்பீட்டுத் தேர்வு பதிவுகள் இருப்பதால், அவற்றை வைத்து மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆனால், தனித்தேர்வர்களுக்கு உள்மதிப்பீட்டுப் பதிவுகள் இல்லாததால், அவர்களுக்கென ஜூன் 21 அன்று புதிய சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, தனித்தேர்வர்களுக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற கோட்பாட்டுத் தேர்வு மதிப்பெண்களில் 40 சதவீதமும், தேர்வர் கடைசியாக எழுதிய 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற கோட்பாட்டுத் தேர்வு மதிப்பெண்களில் 60 சதவீதமும் என்ற விகிதத்தில் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். இந்த முறையையும் எதிர்த்துத் தனித்தேர்வர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். மாணவர்களின் கல்வி எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூலை 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.
