மும்பையில் பிரபல பிக்பாஸ் நடிகை அர்ச்சனா கவுதம் நடத்தி வரும் 'Oye Churros' கேஃபேவில், கேஷ் கவுண்டரை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துணிகர சம்பவம், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகையும் மாடலுமான அர்ச்சனா கௌதம், மும்பையில் 'ஓயே சுரோஸ்' என்ற பெயரில் சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த உணவகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த பணப் பெட்டியுடன் கூடிய கேஷ் கவுண்டரை சர்வ சாதாரணமாக தூக்கிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த திருட்டு சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை நடிகை அர்ச்சனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
'அந்த நபர் மிகவும் சாதாரணமாக என் கேஃபேவுக்குள் வந்து, அங்கிருந்த பணப் பெட்டியை அப்படியே தூக்கிக் கொண்டு சென்றுவிட்டார். இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், ஆறாத துயரத்தையும் அளித்துள்ளது' என்று அர்ச்சனா தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகால உழைப்பாலும், தனது சொந்த சேமிப்பாலும் இந்த உணவகத்தை உருவாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அர்ச்சனா கௌதம் மும்பை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என்றும் அவர் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு நடிகை அர்ச்சனா விடுத்துள்ள செய்தியில், 'எப்போதும் விழிப்புடன் இருங்கள். உங்கள் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பாதுகாப்பில் மிகுந்த கவனத்துடனும் தீவிரத்துடனும் இருங்கள்' என்று அறிவுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

