லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், தனது மனைவி மற்றும் சகோதரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த மானஸ் மிஸ்ரா (38 வயது) என்பவர், ஒரு தனியார் வங்கியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி திவ்யா மிஸ்ரா (37 வயது), கோமதி நகர் பகுதியில் உள்ள மற்றொரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று மதியம் சுமார் 12.15 மணியளவில், மானஸ் மிஸ்ரா, திவ்யா பணிபுரியும் வங்கிக்குச் சென்றுள்ளார். அங்கு திவ்யாவை வெளியே வருமாறு அழைத்துள்ளார். திவ்யா வெளியே வந்ததும், மானஸ் மிஸ்ரா அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த துயரச் சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான மானஸ் மிஸ்ராவைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, மானஸ் மிஸ்ரா தனது வீட்டில், மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தனது சகோதரி ஷீபா பாஜ்பாயை (28 வயது) துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்குத் தெரியவந்துள்ளது. இந்தச் செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து உடனடியாக போலீசார் மானஸ் மிஸ்ராவின் வீட்டிற்கும் விரைந்து சென்றுள்ளனர். அங்கு அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடங்களை ஆய்வு செய்து, தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
