2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில் சித்தா (BSMS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஓமியோபதி (BHMS) மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (BNYS) ஆகிய மருத்துவ பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு ஒதுக்கீட்டு இடத்திற்கும் தனித்தனி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த இளநிலை ஆயுஷ் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான உரிய தகவல் தொகுப்பேட்டை 'www.tnayushselection.org' என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையவழியில் மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், வேறு எந்த வழியிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்பட்ட NEET (UG) 2026 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், தகுதி வரிசைப்படி மேற்கொள்ளப்படும். யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (BNYS) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, மேல்நிலைப் பள்ளி (+2) பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், தகுதி வரிசைப்படி நடைபெறும்.
மாணவர் சேர்க்கைக்குத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம், கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களை www.tnayushselection.org என்ற வலைதளத்தில் உள்ள தகவல் தொகுப்பேட்டில் விரிவாக அறியலாம். இந்தப் படிப்புகளின் காலம் 5 1/2 ஆண்டுகள் ஆகும். இதற்கு 10+2 (அறிவியல் பாடங்களில் தேர்ச்சி) அல்லது NEET- 2026 (UG) மதிப்பெண்கள் தகுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்லூரிகள் வாரியாக இருக்கைகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அரசு சித்தா மருத்துவக் கல்லூரிகளில் 160 இடங்களும், அரசு ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி கல்லூரிகளில் முறையே 60, 60, 50 இடங்களும் உள்ளன. அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 160 இடங்கள் உள்ளன. மேலும், சுயநிதி கல்லூரிகளில் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 820, 270, 900, 1900 என ஏராளமான இடங்கள் உள்ளன.
இணையவழி விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு வெவ்வேறு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. OC, BC, BCM, MBC/DNC பிரிவினருக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.500 கட்டணம். SC, SCA & ST பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அகில் இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.1,000, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.5,500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் ரூ.100/- கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
தற்போது, 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான இந்த மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு, ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாச நீட்டிப்பை மாணவர்கள் பயன்படுத்தி, தங்களுக்கு விருப்பமான ஆயுஷ் மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
