ஆவடியில் 140 கிலோ கஞ்சா, 2000 மாத்திரைகள்: 6 பேர் கைது!

சென்னை: ஆவடி அருகே 140 கிலோ கஞ்சா மற்றும் 2,000 போதை மாத்திரைகளை கடத்தி வந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் ஆவடி ஜே.பி. எஸ்டேட் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வெற்றி நகர் முதல் தெருவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டதில் 62 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அவர்கள் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தயாளன் (21), உதய பிரசாந்த் (21), கோபாலகிருஷ்ணன் (21) என்பதும், அவர்களுடன் சேர்ந்து வீட்டில் இருந்த கோபி என்பவரிடமிருந்து மேலும் 38 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்த 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இவர்கள் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்துள்ளனர். போலீஸ் சோதனைகளைத் தவிர்க்க, இவர்கள் தொழில்முறை பைக் ரைடர்கள் போல மாறுவேடமிட்டு, பைக் டூரிஸ்ட் குழுக்களுடன் கலந்து சென்னைக்கு கடத்தி வந்துள்ளனர். பின்னர், சிறு கடத்தல் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டியுள்ளனர்.

இதேபோல், நேற்று அயப்பாக்கம் காவல்துறையினர் டோனே கலா கேம்ப் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (21), ருகேஷ் குமார் (19) ஆகியோரையும் பிடித்து சோதனை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 40 கிலோ கஞ்சா, 1,700 நைட்ரா செப்பம் மாத்திரைகள், 300 டாபெண்டடோல் மாத்திரைகள் என மொத்தம் 2,000 போதை மாத்திரைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த இருவரையும் கைது செய்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version