அசாம் மாநில சட்டப்பேரவையில் இன்று பொது சிவில் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், உத்தராகண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக, பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றவுள்ள மூன்றாவது மாநிலமாக அசாம் திகழ உள்ளது.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா சார்பில், அமைச்சர் அதுல் போரா இந்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். வரும் மே 27 அன்று இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, மே 13 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த மசோதா குறித்து பேசிய முதல்வர் ஹிமந்த சர்மா, 'பட்டியல் பழங்குடியினர் (மலைப்பகுதி) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (சமவெளிப்பகுதி) ஆகியோருக்கு பொது சிவில் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். அவர்களின் பாரம்பரிய மத வழக்கங்கள், நடைமுறைகள் மற்றும் சடங்குகளும் இதிலிருந்து பாதுகாக்கப்படும்' என்று தெரிவித்தார். பொது சிவில் சட்டம் முக்கியமாக திருமண வயது, பலதார மணத் தடை, மகள்களுக்கு சொத்தில் சம உரிமை மற்றும் திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் உறவுகள் போன்ற நான்கு முக்கிய விஷயங்களை உள்ளடக்கியிருக்கும்.
சமீபத்தில் நடைபெற்ற அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 126 தொகுதிகளில் 82 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சிகளான அசாம் கண பரிஷத் மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி தலா 10 இடங்களை வென்றன. இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 102 ஆக உயர்ந்தது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.