தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தளபதி விஜய் பதவியேற்றதை அடுத்து, அமைச்சரவை விரிவாக்கமும் அதன் தொடர்ச்சியாக இலாகாக்கள் ஒதுக்கீடும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அமைச்சர் ராஜ்மோகனுக்கு சினிமாத்துறை ஒதுக்கப்பட்டதற்கு நடிகர் விஷால் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது குறித்து நடிகர் அருண் விஜய் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த 10-ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருக்கு நடிகர் அருண் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். விஜய் அவர்கள் பதவியேற்றபோது, 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர். அமைச்சரவைக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பாக சில கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில், நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில் முதலமைச்சர் விஜய் உட்பட 10 அமைச்சர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளி கல்வித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, அத்துடன் சினிமாத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஷால், அமைச்சர் ராஜ்மோகனுக்கு சினிமாத்துறை ஒதுக்கப்பட்டது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அனுபவம் வாய்ந்த ஒருவருக்குப் பதிலாக, அனுபவமற்ற ஒருவரிடம் திரைத்துறையின் கோரிக்கைகளை வைப்பது சரியா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். விஷாலின் இந்தக் கருத்துக்கள் திரைத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தின.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக நடிகர் அருண் விஜய், தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு மூலம் பதிலடி கொடுத்துள்ளார். 'முதலமைச்சரின் முடிவுகளில் யாரும் தலையிட வேண்டாம். மக்கள் அவர்களை நம்பித்தான் முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். நீங்கள் மக்கள் மனதை வென்று, தேர்தலில் வெற்றி பெற்று வந்தால், அப்போது உங்கள் விருப்பங்களைப் பதிவிடுங்கள். மீண்டும் சொல்கிறேன், முதல்வர் முடிவுகளில் தலையிடாதீர்கள்' என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், 'முதலமைச்சர் திரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதால், நமது நிலையை அவர் நன்கு புரிந்துகொள்வார். அவர் நமக்கு நல்லது மட்டுமே செய்வார் என உறுதியாக நம்புகிறேன். பொறுத்திருங்கள், அனைத்தும் நல்லபடியாக நடக்கும்' என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.