பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகி, புதிய கட்சி தொடங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள அண்ணாமலை, தனக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிளஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தொடங்கிய 'இது நம்ம இயக்கம்' என்ற அமைப்பில் குறுகிய நேரத்தில் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.
முன்னதாக, பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது, மத்திய அரசால் அண்ணாமலைக்கு துப்பாக்கி ஏந்திய இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அவர் கட்சியிலிருந்து விலகிவிட்டதால், இந்த உயர் அடுக்கு பாதுகாப்பு தனக்குத் தேவையில்லை என்று அவர் கருதுகிறார்.
இதனையடுத்து, தனது இசட் பிளஸ் பாதுகாப்பை உடனடியாக திரும்பப் பெறுமாறு உள்துறை அமைச்சகத்திற்கு அவர் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த கோரிக்கையை ஏற்று, மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பை வாபஸ் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாமலை புதிய கட்சி தொடங்கும் ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. லட்சக்கணக்கானோர் அவரது இயக்கத்தில் இணைந்திருப்பது, அவரது அரசியல் நகர்வுகளுக்கு வலு சேர்க்கிறது.