நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி உயிரிழந்த மாணவி அனிதாவின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.
முதலில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்வுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், பின்னர் பெரியார் திடலுக்கு மாற்றப்பட்டது. தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு (TSYF) இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த முக்கிய நிகழ்வில், பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்துகொண்டு மறைந்த அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர். மாணவர்களின் கல்வி உரிமைக்காகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதா நடத்திய போராட்டத்தை நினைவு கூர்ந்தனர்.
நிகழ்வில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, நடிகர் சத்யராஜ், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், எஸ்டிபிஐ மாநில துணைத் தலைவர் அசார் உமர் பாரூக், மனிதநேய மக்கள் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் சமது, திமுக மாநில மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எழிலன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பொதுச் செயலாளர் தியாகு, திவிக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையச் செயலாளர் நிஜாமுதின், அற்புதம்மாள், மே 17 இயக்கத்தின் விவேகானந்தன், தேமுதிக தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி, தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் இளமாறன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும், நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில், மாணவர்களின் கல்வி உரிமை, சமூக நீதி மற்றும் சமத்துவம் போன்ற முக்கிய கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. அனிதாவின் தியாகத்தை நினைவுகூர்ந்து, எதிர்கால மாணவர்களின் நலனுக்காக குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் எடுத்துரைத்தனர்.
தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் கஸ்ஸாலி மீரான், இளையராஜா, பிரபாகரன், அசாருதீன், வினோத் ஆகியோர் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டனர். அனிதாவின் நினைவைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, சமூக நீதிப் போராட்டங்களுக்கு ஒரு வலுவான நினைவூட்டலாக அமைந்தது.

