சென்னையில் வீடு கட்டுவதற்காக பணம் தேவைப்பட்டதால் நகை பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பூர், முனியப்பன் தெருவில் வசிக்கும் கல்யாணி என்பவர் கடந்த 3-ம் தேதி காலை சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றார். கல்யாணி செயினை இறுகப் பிடித்துக்கொண்டதால், செயினின் ஒரு பகுதி மட்டுமே அந்த இளைஞரின் கையில் சிக்கியது. அதனுடன் அந்த இளைஞர் தப்பி ஓடினார்.
இந்த சம்பவம் குறித்து செம்பியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, நகை பறிப்பில் ஈடுபட்டது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பொப்பலாட்டா ஸ்ரீனு (22) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் சமீபத்தில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பொப்பலாட்டா ஸ்ரீனுவிடம் நடத்திய விசாரணையில், அவர் சென்னையில் புறநகர் ரயிலில் ஏடிஎம் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளின் பவுசுகளை விற்பனை செய்து வந்துள்ளார். அவரது பெற்றோர் வீடு கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால், இந்த நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார். மேலும், திருடிய தங்கச் செயினை விற்பனை செய்வதற்காக உருக்கி தங்கக் கட்டியாக மாற்றி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, பொப்பலாட்டா ஸ்ரீனுவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவனிடம் இருந்து தங்கக் கட்டியாக மாற்றப்பட்ட செயினையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
